வாழ்வை வளமாக்கும் ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர்!
சென்னைக்கு அருகில் உள்ள ரத்தினமங்கலத்தில் குபேர பகவானுக்காக ஒரு கோவில் அமைந்திருக்கிறது லட்சுமி குபேரர் கோவில் என்று அழைக்கப்படும் இந்த ஆலயம் சுமார் 4000 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கிறது.

ஒருமுறை குபேரன் கைலாயம் சென்று சிவபெருமானை தரிசிக்க நினைத்தார். அப்படி அவர் கைலாயம் சென்றபோது பார்வதி தேவியுடன் சிவபெருமான் இருப்பதைக் கண்டார்.பார்வதி தேவியின் மகிமையையும் அழகையும் கண்டு வியந்து போன குபேரன் இவ்வளவு காலமாக இத்தனை பேரழகு கொண்ட தேவியை காணாமல் போய்விட்டேனே என்று நினைத்தான். அப்போது குபேரனின் ஒரு கண் தானாகவே மூடிக்கொண்டது. குபேரன் தன்னை பார்த்து கண்சிமிட்டுவதையும் தீய நோக்கத்துடன் பார்ப்பதையும் கண்டு பார்வதி தேவி கோபமடைந்தாள்.அவள் அவனது கண்ணை வெடிக்கச் செய்தாள்.குபேரன் ஒரு கண்ணில் பார்வை இழந்ததுடன்'எப்போதும் அவலட்சணமாக இருப்பாய் என்றும்' பார்வதியால் சபிக்கப்பட்டான்.
சாபம் பெற்ற குபேரன் சிவபெருமானிடம் தன்னை மன்னித்து அருளும்படி மன்றாடினான். மேலும் தான் எந்த தீய நோக்கத்துடனும் தேவியை பார்க்கவில்லை என்று விளக்கினான். சிவபெருமானும் உண்மையை உணர்ந்து தன் மனைவி பார்வதியிடம் நடந்ததை எடுத்து கூறினார். அந்த நேரம் முடிவை பார்வதியே எடுக்கும்படி கூறிவிட்டார். இதை அடுத்து பார்வதி தேவி குபேரனை அழைத்து அவன் இழந்த கண்ணை மீண்டும் அளித்தாள். ஆனால் அந்தக் கண் மற்றொரு கண்ணை விட சிறியதாக இருந்தது .எனவேதான் குபேரனின் ஒரு கண் மற்றொரு கண்ணை விட சிறியதாக காட்சியளிப்பதாக புராணம் செல்கிறது. எட்டு திசைகளில் ஒன்றான வடக்கு திசையில் காவலராக குபேரனுக்கு சிவபெருமான் பதவி வழங்கினார்.அவரை செல்வம் மற்றும் நிதியின் அதிபதியாக ஆக்கினார். செல்வம் மற்றும் பொருளின் கடவுளான குபேரனுக்கு அவற்றை விநியோகிக்கும் பொறுப்பு இருந்தது. அதே நேரத்தில் செல்வத்தை உருவாக்கும் பொறுப்பு லட்சுமி தேவியின் கைகளில் இருந்தது குபேரனுக்கு பூஜை செய்வது ஒருவரின் வாழ்க்கை வளமாக்கும் என்று நம்பப்படுகிறது.
செல்வ செழிப்பும் வசதியும் நிறைந்த வாழ்க்கை வாழ ஒருவர் லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும். திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாள் தனது திருமணத்திற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும் அதற்கான வட்டியை அவர் இன்னும் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ரத்தினமங்கலம் கோவிலில் லட்சுமி, கணபதி, பிரம்மா, சரஸ்வதி ஐயப்பன் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. மேலும் தியான மண்டபமும் அமைந்துள்ளது. அட்சய திருதியை தினத்தன்று இவ்வாலயத்தில் உள்ள லட்சுமி குபேரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் .இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். சென்னையில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ரத்தினமங்கலம் என்ற ஊர். சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் மார்க்கமாகவும் பேருந்து வாயிலாகவும் இந்த ஊரை அடையலாம்.