Kathir News
Begin typing your search above and press return to search.

நினைத்ததை நிறைவேற்றும் பட்டுக்கோட்டை நாடியம்மன்!

இந்த ஆலயத்தில் அருளும் நாடியம்மன் என்ற பெண் தெய்வத்தை பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.

நினைத்ததை நிறைவேற்றும் பட்டுக்கோட்டை நாடியம்மன்!
X

KarthigaBy : Karthiga

  |  8 March 2025 9:00 PM IST

தஞ்சை மாவட்டத்தில் சோழ மன்னர்களால் பல கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. சோழர்களை தவிர வேறு சில வழிகளில் வந்த மன்னர்களும் பல்வேறு ஆலயங்களை அமைத்துள்ளனர். அந்த வழியில் வந்த மராட்டிய மன்னரான சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது தான் பட்டுக்கோட்டை நாடியம்மன் ஆலயம்.தன்னை நாடி வருபவர்களுக்கு நல்லதை செய்வதால் இந்த அம்மனை அனைவரும் நாடி அம்மன் என்று அழைப்பதாக இந்த ஊர் மக்கள் கூறுகின்றனர். ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வரை இந்த பகுதியில் நாடியம்மாள் என்ற பெயர் பலருக்கும் வைக்கப்பட்டிருந்தது. அந்த பெயரும் கூட இந்த அம்மனின் வழியினால் ஏற்பட்டது தான் என்கிறார்கள்.

இந்த நாடியம்மன் கோவில் உருவானது பற்றிய வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அதை இங்கே பார்க்கலாம்.ஒருமுறை தஞ்சை மராட்டிய மன்னரான சரபோஜி மன்னர் காட்டில் வேட்டையாடச் சென்றார். அப்போது குறிப்பிட்ட ஒரு மிருகத்தை துரத்திக் கொண்டு சென்றபோது அது பிடிபடாமல் போக்கு கட்டியது.மன்னனும் விடாமல் அதை நோக்கி ஒரு அம்பை எய்தான். அந்த அம்பு தாக்கிய நிலையில் அந்த மிருகம் அருகில் இருந்த அடர்ந்த புதருக்குள் போய் ஒளிந்து கொண்டது. தாக்குதலுக்கு உள்ளான அந்த மிருகம் புதரை விட்டு தப்பிச்செல்ல வாய்ப்பு இல்லை என்று நினைத்த மன்னன் அந்த புதரை நீக்கினான். அப்போது அந்த புதருக்குள் ரத்தம் ஒழுக,அழகிய பிடாரியம்மன் சிலை ஒன்று தென்பட்டது .

அந்த சிலையை எடுத்து வந்த சரபோஜி மன்னன் சிலையை சுத்தம் செய்து பட்டுக்கோட்டை பகுதியில் இருந்த சிவன் கோவில் பூசாரிகளை அழைத்து வந்தனர். பிடாரி அம்மனுக்கு தனியாக ஒரு ஆலயம் அமைத்து அதில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போது கோவில் அமைந்த இடம் வனமாக இருந்தது. அமையப்பெற்ற பிடாரி அம்மனுக்கு நித்தியபடி பூஜைகளும் விழாக்களும் செய்யப்பட்டன. கொண்டாடும் பொறுப்பு மற்றும் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்புகளை அவ்வாலயத்தைச் சேர்ந்த சின்னான் செட்டியார் என்பவரிடம் சரபோஜி மன்னன் வழங்கினார். கண்டெடுத்த கருங்கல் பிடாரியம்மன் சிலையை வைத்து வழிபட்டு வந்த பின்பு சின்னான் செட்டியாரின் முயற்சி காரணமாக பிடாரியம்மனுக்கு ஐம்பொன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்து வழிபட தொடங்கினார்.

இந்த அம்மனே நாளடைவில் நாடியம்மன் என்ற பெயர் பெற்றது என்கிறது ஆலய வரலாறு .பங்குனி சித்திரை மாதங்களில் இந்த அம்மனுக்கு காப்பு கட்டி திருவிழா நடைபெறுகிறது. ஐம்பொன் சிலையானது திருவிழாக் காலங்களில் மட்டும் மண்டபத்திற்கு வருவதைத் தவிர ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் மண்டகப்படி நடைபெறும். அனைவரும் வணங்கப்படும் இந்த அம்மன் நினைத்ததை நடத்தி வைக்கும் சக்தி படைத்தவளாக இருக்கிறாள். தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும் அதிராம்பட்டினத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்திலும் பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டரிலும் நாடியம்மன் கோவில் அமைந்திருக்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News