கிறிஸ்தவ மதத்திலிருந்து மீண்டும் இந்துக்களாக மாறிய ராஜஸ்தான் கிராம மக்கள்- கோவிலாக மாறிய தேவாலயம்!
ராஜஸ்தான் கிராம மக்கள் கிறிஸ்தவ மதத்திலிருந்து மீண்டும் இந்துக்களாக மாறியதால் தேவாலயம் கோவிலாக மாறியது. மத போதகராக இருந்தவர் அர்ச்சகராக மாறினார்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் சோட்ல குடா கிராமத்தில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். கௌதம் கராசியா என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றியுள்ளார். இதை அடுத்து அந்த கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தில் தேவாலயம் கட்டி பிரார்த்தனை செய்துவந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய கிராம மக்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற முடிவு செய்தனர்.
இதை அடுத்து தேவாலயத்துக்கு காவி வண்ணம் தீட்டினர். சுவரில் இருந்த சிலுவை குறியீட்டை அழித்துவிட்டு இந்து மத குறியீடுகளை வரைந்துள்ளனர். இந்நிலையில் அந்த கோயிலில் பைரவர் சிலை பிரதிஷ்டை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக அந்த சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டனர். கிறிஸ்தவ மத போதகராக இருந்த கௌதம் இந்த கோயிலின் அர்ச்சகராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்விழாவை முன்னிட்டு அந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.