ஆயிரம் தூண்கள் கொண்ட அற்புதக் கோவில்!
தெலுங்கானாவின் மிகவும் பிரபலமான நினைவுச் சின்னங்களில் ஒன்றாக விளங்குவது வாரங்கல் ஆயிரம் தூண்கள் கோவில்.

காகத்திய மன்னர்களின் அரிய கலைப்படைப்பு,சிவன் விஷ்ணு மற்றும் சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம், சிற்பங்களுக்கு புகழ்மிக்க ஆலயம், இசை எழுப்பும் தூண்கள் கொண்ட ஆலயம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்டு விளங்குவது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் ஆயிரம் தூண்கள் ஆலயம். வாரங்கல் நகரம் வாரங்கல், காசிபட்டி மற்றும் ஹனம் கொண்டா போன்ற மூன்று நகரங்களின் தொகுப்பைக் குறிக்கிறது. இந்நகரம் சுற்றுலா தலங்களுக்கு புகழ் பெற்றது. தெலுங்கானாவின் மிகவும் பிரபலமான நினைவு சின்னங்களில் ஒன்றாக விளங்குவது வாரங்கல் ஆயிரம் தூண்கள் கோவில்.
இது கிபி 1163ல் காகத்திய மன்னர் ருத்ரதேவரால் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டது.சிவன் விஷ்ணு மற்றும் சூரியன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இது .துளையிடப்பட்ட கல் திரைகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட தூண்கள்,செழுமையாக செதுக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் காகத்திய கட்டிடக்கலையின் சிறப்பை பிரதிபலிக்கும் பாறையில் செதுக்கப்பட்ட யானைகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. காகத்தியர்கள் நாட்டின் வளத்தை பற்றி அறிய விரும்புவோருக்கு ஆயிரம் தூண்கள் கோவிலில் சிறந்த சான்று .
1000 தூண்கள் கோவில் வாரங்கல்லில் உள்ள மிகவும் பிரபலமான தலமாகும். மேலும் அனைத்து மதங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து இதன் கட்டுமானத்தைக் கண்டு வியக்கின்றனர். இந்த கோவில் நட்சத்திர வடிவ கட்டிடக்கலையை கொண்டுள்ளது. இது கைவினைஞர்களின் நிபுணத்துவத்திற்கு சான்றாக நிற்கிறது. அற்புதமான கோவிலை அழகிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கருப்பு பசால்ட் கல்லால் ஆன ஒரு பெரிய ஒற்றை கல் நந்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆயிரம் தூண்கள் கோவில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது.
கோவில் வளாகத்திற்குள் நுழைந்த உடனேயே நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. படிகள் முதல் சுவர்கள் வரை பார்க்கும் அனைத்துமே உயிரோட்டமான சிற்பங்களாக காட்சி தருகின்றன. சுவர்களில் உள்ள சிற்பங்கள் ஒரு தெய்வீக உலகத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது.கோவிலின் மூலவர் மன்னர் பெயராலேயே ருத்ரேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த ஆயிரம் தூண்கள் ஆலயம் காகத்திய வம்சத்தின் கட்டிட கலைகளின் தலைசிறந்ததாக கருதப்படுகிறது. பிற்கால மன்னர்களும் இந்த கோவிலுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. ஆலயத்தின் பெயரை போலவே ஆயிரம் தூண்களை கொண்டு கட்டப்பட்ட கோவில் இது. இந்த தூண்களை உலோகப் பொருள் கொண்டு தட்டும்போது ஏழு ஸ்வரங்களின் மெல்லியை இசையை கேட்கலாம்.
ஆயிரம் தூண்கள் கோவிலை நீங்கள் எங்கு பார்த்தாலும் அழகு நிறைந்த சிற்பங்கள் உள்ளன. தெற்கே உள்ள உயரமான நுழைவு வாசலிலும் ஆயிரம் தூண்கள் கொண்ட மண்டபத்தில் உயர்ந்த பீடத்தில் உள்ள நந்தீஸ்வரர் சிலையும் காகத்திய சிற்பக்கலையின் அறிய சின்னங்கள் ஆகும். நட்சத்திர அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தில் எண்ணற்ற சன்னிதிகளும் லிங்கங்களும் நிறுவப்பட்டுள்ளன. சிவன் விஷ்ணு சூரியன் மூவருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.ஆயிரம் தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும் ஆலயத்தின் எந்த மூலையில் இருந்து பார்த்தாலும் மத்தியில் உள்ள பெரிய சிவலிங்கத்தை தூண்கள் எதுவும் மறைக்காமல் இருக்கும் விதமாக கட்டப்பட்டுள்ளது தனி சிறப்பு.ஆலயத்தின் முன்புறம் ஒற்றை கல்லால் ஆன பெரிய கருங்கல் நந்தி ஒன்று இன்றும் பளபளப்பாய் உயிரோட்டத்துடன் காணப்படுகிறது. இதன் அலங்கார மணிமாலைகள் உலோகத்தால் உருவானது போல உள்ளன இதன் திருமேனியை தடவினால் உயிருள்ள காளையை தொடுவது போன்ற உணர்வு ஏற்படுவது இதன் கலைநயத்தை வெளிப்படுத்துகிறது.
கல்லிலே செதுக்கப்பட்ட யானை வரிசையும் துளைத்து செதுக்கப்பட்ட ஜன்னல் அமைப்புகளும் காகத்திய வம்சத்தின் கட்டிடக்கலைக்கும் அதன் கலை நுணுக்கத்திற்கும் சான்றாக உள்ளது. ஆலயத்தின் அருகே கலைநயம் கொண்ட செவ்வக வடிவ திருக்குளம் அமைந்துள்ளது. மரத்தடியில் அனுமன் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. பல்வேறு படையெடுப்பு காரணமாக இந்த கோவில் சிதிலமடைந்தது என்றாலும் 2004 இல் இந்திய தொல்லியல் துறையினரால் ஆயிரம் தூண்கள் கோவில் மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் வாரங்கல் நகரில் பேருந்து நிலையத்திற்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.