Kathir News
Begin typing your search above and press return to search.

குழந்தை வரம் அருளும் பேச்சியம்மன்!

21 பந்தி தெய்வங்களில் மிக முக்கியமான வன தேவதையாக விளங்கும் பேச்சி அம்மன் சிறப்பை பற்றி காண்போம்.

குழந்தை வரம் அருளும் பேச்சியம்மன்!
X

KarthigaBy : Karthiga

  |  12 Oct 2023 9:00 AM GMT

ஒரு காலத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த வல்ல ராஜா என்ற மன்னன் தன்னுடைய ஆட்சியில் பலரையும் கொடுமை படுத்தி வந்தான். மக்கள் மட்டுமின்றி ரிஷிகளும் முனிவர்களும் கூட அவனால் துன்பப்பட்டனர். இந்நிலையில் ஒரு முனிவர் மூலம் வல்லராஜா சாபத்தை பெற்றார். இவனுக்கு பிறக்கும் குழந்தை பிரசவமானதும் அந்த குழந்தையின் உடல் உடனே பூமியை தொட்டுவிட்டால் அவன் அழிந்துது விடுவான். அவனது நாடும் அழிந்துவிடும் . மாறாக அந்த குழந்தை பூமியை தொடாமல் ஒருநாள் இருந்து விட்டால் அதற்குப் பிறகு ஒன்றும் ஆகாது என்பது மன்னனுக்கு ஏற்பட்ட சாபம்.


இதற்கிடையில் கர்ப்பவதியான வல்ல ராஜாவின் மனைவிக்கு பிரசவ வலி உண்டானது. மன்னனுக்கு இருந்த சாபத்தால் அவன் மனைவிக்கு பிரசவம் பார்க்க எவரும் முன்வரவில்லை. பிறக்கும் குழந்தையும் நலமாக இருக்க வேண்டும் . அதே நேரத்தில் தானும் அழியாமல் இருக்க வேண்டும் என கவலை அடைந்த மன்னன் தானே ஊருக்குள் சென்று பிரசவம் பார்க்கும் பெண்ணைத் தேடினான். அப்போது அவன் முன்பாக வயதான பெண் வடிவத்தில் பேச்சி அம்மன் தென்பட்டாள்.


அவள் தெய்வப் பிறவி என்பதை அறியாத மன்னன் அவளது உதவியை நாடினான். அதற்கு அந்த அன்னை நான் உன் மனைவிக்கு பிரசவம் பார்த்து அந்த குழந்தை பூமியை தொடாத படி பார்த்துக் கொள்கிறேன். அதற்கு எனக்கு தேவையானதை தர வேண்டும் என்றாள். மன்னனும் கேட்டதை தருவதாக வாக்களித்தான். அதன் படி மன்னனின் மனைவிக்கு பிரசவம் பார்த்த பேச்சியம்மன் அந்த குழந்தை பூமியை தொடாத படி பார்த்துக் கொண்டார்.


ஒரு நாள் முடிந்ததும் மன்னன் தன் வேலையை காட்டினான். பேச்சி அம்மன் கேட்ட எதையும் கொடுக்காமல் அவளைக் கொல்ல முயன்றான். ஆனால் தன் சுய உருவத்தை காட்டிய பேச்சி அம்மன் மன்னனையும் அவன் மனைவியையும் வம்சாவழியையும் அழித்து அங்குள்ள மக்களை காப்பாற்றினாள்.இதனால் மக்கள் அனைவரும் அந்த அன்னையை கை கூப்பி தொழுதனர். இதை அடுத்து பேச்சியம்மன் தன்னுடைய கோபம் தணிந்து சாந்தமானாள்.


பின்னர் நான் காளியின் அவதாரம். என்னை வணங்கி வந்தால் நான் குடிகொள்ளும் ஊரை காப்பேன். அவரவர் வீடுகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவமாகவும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் நன்கு வளரவும் உதவுவேன். அனைவருக்கும் பாதுகாவலாக இருப்பேன் என்று உறுதி அளித்தாள் என்கிறது தல வரலாறு. 21 பந்தி தெய்வங்களில் பேச்சியம்மன் மிக முக்கியமான வன தேவதையாக விளங்குகிறாள் . குழந்தை வரம் கொடுப்பதில் பேச்சியம்மன் முதன்மையான தெய்வமாக விளங்குகிறாள்.


எனவே தான் குழந்தை இல்லாத தம்பதியினர் பேச்சியம்மனை மனம் உருகி வணங்கி குழந்தை பிறந்தவுடன் நேர்த்திக்கடனாக மரத் தொட்டில் கட்டி சீலை பிள்ளை மற்றும் குழந்தை பொம்மை வாங்கி வைக்கின்றனர். குழந்தைகள் பேச்சாற்றல் மிகுந்து விளங்க நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும் பேச்சியம்மனை வழிபடுகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News