பண்பொழி திருமலை முத்துக்குமாரசுவாமி கோவில்!
தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் தலம் திருமலை முத்துக்குமாரசாமி கோவில்.
By : Karthiga
தென்காசியில் இருந்து வட மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவிலும் செங்கோட்டையிலிருந்து வடக்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலும் பண்பொழி என்ற இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது முத்துக்குமாரசுவாமி கோவில். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு குன்றில் கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த கோவில் தேவார பாடல் பெற்ற தலமாகும். முற்காலத்தில் இந்த திருமலை கோவிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது .அதற்கு பூவன் பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வந்தார்.
ஒருநாள் பூஜையை முடித்துவிட்டு அவர் அங்குள்ள புளிய மரத்தின் அடியில் ஓய்வுக்காக படுத்திருந்தார் .அப்போது அவரது கனவில் தோன்றிய முருக பெருமான் "பட்டரே இந்த மலை எனக்கு சொந்தமானது . இங்கிருந்து சற்று தொலைவில் அச்சன் கோவிலுக்கு போகிற வழியில் உள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் நான் மணலில் சிலை வடிவில் புதைந்து இருக்கிறேன். நீர் அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்துசெல்லும் ஒரு குழியை தோண்டி பார்த்தால் அங்கு எனது சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் வைத்து இந்த மலையில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்" என்று கூறினார்.
பக்தர்கள் மலைக்குச் சென்றுமுருகப்பெருமானை வழிபடுவதற்கு வசதியாக படிகள் அமைக்கவும் கோவிலில் ஏற்பாடு செய்தனர் .அத்துடன் இந்த தகவலை பந்தள மன்னரின் கனவிலும் தெரிவித்து இருப்பதாக கூறி மறைந்தார். இதைத் தொடர்ந்து பூவன் பட்டரும் பந்தள மன்னரும் முருகப்பெருமான் கனவில் வந்து சொன்ன அந்த இடத்துக்கு சென்று புதைந்து கிடந்த சிலையை பயபக்திதுடன் எடுத்து திருமலைக்கு கொண்டு வந்து குவளை பொய்கையின் அருகே உள்ள புளிய மரத்தின் அடியில் வைத்து பூஜைகள் செய்தனர்.
நெல்லையம்பலம் மயிலப்பன் என்ற முருக பக்தர் இப்போது உள்ள ஆலயத்தை கட்ட தொடங்கி மானியங்கள் வழங்கியதாகவும் அதன் பிறகு சொக்கம்பட்டி ஜமீன் அம்பலவான முனிவர் அச்சன்புதூர் கிராமத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த பின்னர் துறவியாக மாறிய சிவகாமி பரதேசி அம்மையார் ஆகியோர் இந்த கோவிலுக்கு பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
இந்த கோவிலில் குமாரசாமி கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். கோவிலின் வடக்கு பிரகாரத்தில் காளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 520 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல 624 படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டுகளில் ஏறி செல்லும் பொழுது வழியில் இடும்பன், விநாயகருக்கு தனி கோவில்கள் உள்ளன. இந்த படிக்கட்டுகள் ஸ்கந்த கோஷ்ட பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுகள் என கூறப்படுவதால் இந்த தலத்துக்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சந்ததிகளுக்கு சிறப்பான வாழ்வு அமையும் என்று நம்பிக்கை உள்ளது.
சிறந்த ஆன்மீக தலமாகவும் சுற்றுலாத்தலமாகவும் விளங்கும் இந்த திருமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறாரகள். மலை உச்சியில் நின்று சுற்றிலும் நோக்கினால் பஞ்சு பொறிபோல் மேகங்கள் தவழ்ந்து செல்லும். வானுயர்ந்த மலைகள், தென்னந்தோப்புகள் , பசுமை போர்த்திய வயல்வெளிகள் அவற்றுக்கு நடுவில் தென்படும் கிராமங்கள் உடலையும் உள்ளத்தையும் தழுவிச் செல்லும் குளிர் காற்று என கண்கொள்ளா காட்சியாக இருக்கும் .
விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம் , விபுலசாகம் என்ற மூவகை ஒலி கிரணங்களைை கொண்டது . இந்த கிரணங்கள் அனைத்தும் இந்த மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவது மிகவும் நல்லது என்ற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது. இந்தக் கோவில் காலை 6:00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
SOURCE :DAILY THANTHI