Kathir News
Begin typing your search above and press return to search.

பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் பண்ணாரி மாரியம்மன்!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி என்ற ஊரில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில்.

பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் பண்ணாரி மாரியம்மன்!
X

KarthigaBy : Karthiga

  |  2 April 2024 8:02 AM GMT

ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதியில் அமைந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக திகழ்கிறது பண்ணாரி அம்மன் கோவில். இங்கு பண்ணாரி அம்மன் சுயம்பு வாக லிங்க வடிவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பண்ணாரி மற்றும் அதன் சுற்றுலா பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் இந்த அன்னை இருக்கிறாள். பொதுவாக அம்மன் ஆலயங்கள் வடக்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலயம் தெற்கு நோக்கி உள்ளது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்லப்படுகிறது. அப்போது இந்த பகுதி அடந்த வனப்பகுதியாக இருந்தது. இப்பகுதியில் வற்றாத காட்டாறு ஓடிக்கொண்டே இருக்கும். தோரண பள்ளம் என்ற அந்த காட்டாறு இவ்வாலயம் அமைந்த இடத்திற்கு மேற்கு புறத்தில் இருக்கிறது. இந்த பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் பலரும் ஆடு மாடுகளை மேய்ப்பதற்காக இந்த வனப்பகுதிக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தனர் .அவர்கள் வனப்பகுதியிலேயே மாடுகளுக்கு பட்டிகளை அமைத்திருந்தனர். காலையில் அந்த வனத்திற்குள் மாடுகளை மேயவிட்டு விட்டு மாலையில் பட்டியில் அடைத்து தாங்களும் அங்கேயே தங்கிக் கொள்வார்கள்.

அதோடு காலையிலும் மாலையிலும் பசுக்களிடமிருந்து பாலைக்கறந்து அதன் உரிமையாளர்களிடம் சேர்த்து விடுவர் .அப்போது ஒரு பட்டியிலிருந்து காராம்பசு ஒன்று பால் கறப்பதற்கு சென்றால் பால் சுரக்காமலும் தன்னுடைய கன்றுக்கு கொடுக்காமலும் இருப்பதை அந்த பட்டியை பராமரிப்பவன் அறிந்தான். அவன் மறுநாள் அந்த காராம்பசுவை பின்தொடர்ந்தான் .அந்த பசுவானது ஒரு வேங்கை மரத்தின் அடியில் கணாங்கு புற்களை சூழ்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாலை தன்னிச்சையாக பொழிவதை மறைவில் இருந்து பார்த்தான் .இந்நிகழ்வை கண்ட அவன் மறுநாள் சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்களிடம் நடந்ததை பற்றி விவரித்தான். அவர்கள் மறுநாள் பசுவை பின்தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர் .

அங்கு அதே இடத்தில் பசு தன்னுடைய பாலை தானாக சுரப்பதை அனைவரும் கண்டனர் .இந்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பசு அங்கிருந்து அகன்றதும் மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் இருந்த கணாங்கு புற்களை அகற்றியபோது அங்கே வேங்கை மரத்தின் அடியில் ஒரு புற்றும் அதன் அருகில் சுயம்புலிங்க திருவுருவமும் இருப்பதை கண்டறிந்தனர். அப்போது மக்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர் அருள் வந்து தெய்வ வாக்கு கூறினார்.

நான் கேரள மாநிலம் வர்ணார்க்காடு என்ற ஊரிலிருந்து பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். இங்கு காணப்படும் எழில் மிகுந்த இயற்கைச் சூழலில் தங்கி விட்டேன். என்னை பண்ணாரி மாரியம்மன் என்ற பெயரில் போற்றி வழிபடுங்கள் என்றார். பின்னர் அன்னையின் அருள் வாக்குப்படி அந்த இடத்திலேயே கணாங்கு புற்களை கொண்டு ஒரு குடில் அமைத்து கிராமிய முறைப்படி நாள்தோறும் பண்ணாரி அம்மனை வழிபாடு செய்து வந்தனர்.

இந்த ஊர் மக்களும் பணம் வசதி படைத்தவர்களும் கூடி பேசி அம்மனுக்கு விமானத்துடன் கூடிய கோவிலை அமைத்தனர் .அந்த ஆலயத்தில் பத்மபீடத்துடன் அம்மனுக்கு திருவுருவம் அமைத்தும் வழிபாடு செய்ய தொடங்கினர் .தற்போதைய பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும் அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் ஆகியவற்றுடடன் அழகிய சிற்பங்களை கொண்டு கண்கவர் ஆலயமாக பொலிவுடன் திகழ்கிறது.

சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி திருத்தலம் உள்ளது. ஈரோட்டில் இருந்து 77 கிலோ மீட்டர் ,கோவையிலிருந்து 82 கிலோமீட்டர், திருப்பூரில் இருந்து 65 கிலோமீட்டர் , சேலத்தில் இருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் பண்ணாரி மாரியம்மன் கோவில் இருக்கிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News