Kathir News
Begin typing your search above and press return to search.

தீராத கடனையும் தீர்த்தருளும் பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த முனிஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபடுபவர்கள் தீராத கடனையும் தீர்த்து விடலாம் என்பது நம்பிக்கை.

தீராத கடனையும் தீர்த்தருளும் பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர்!

KarthigaBy : Karthiga

  |  9 March 2023 10:30 AM GMT

புதுக்கோட்டை அருகே ஒரு அடர்ந்த மரங்கள் கொண்ட சோலைவனக் காடு இருந்தது. அதில் முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அந்தக் காட்டிற்குள் வேட்டையாட வேடன் ஒருவன் மனைவியுடன் வந்தான். வேட்டை மீது ஆர்வம் கொண்டிருந்த வேடன் மனைவியை மறந்து விட்டான். வேடன் மனைவி அழகிய மலர்களை கண்டு அந்த சோலைக்குள் சென்றாள். சிறிது நேரத்தில் தனது மனைவியை தேடலானான். ``குயிலி.. குயிலி...’’ என வனம் முழுக்க கத்தினான். கதறினான். கொடிய வன விலங்குகள் மனைவி குயிலியை கொன்று இருக்குமோ? என அஞ்சினான். அங்கும் இங்கும் ஓடினான்.


எங்கும் மனைவியை தேடி கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, அப்போது அந்த முனிவர் வேடனைப் பார்த்து ‘‘யாரப்பா நீ, இங்கே என்ன செய்கிறாய், எதையோ இழந்தது போல் துடிக்கிறாயே என்ன என்று கேட்க, தன் நிலையை சொல்லி அழுதான் அந்த வேடன். முனிவர் தன்னுடைய தன் தவபலத்தால் அந்த பெண் இருக்கும் இடத்தையும், அவள் நலமோடு இருப்பதையும் எடுத்துக் கூறினார். உடனே உற்சாகம் கொண்டு அவ்விடம் சென்று மனைவியை கண்டான் வேடன்.


அதற்கு நன்றிக் கடனாக தினம் தோறும் அந்த முனிவருக்கு கிழங்குகள், பழங்கள், முதலியவற்றை வழங்கிவந்தான். பின்னர் வேடனை அழைத்து அருகே அமரவைத்த முனிவர், வருமானத்திற்காக, நீ வாழ, வன விலங்கை கொல்லாதே, உன் வாழ்க்கைக்கு தேவையானவற்றை பெற்றிட, இந்த பகுதியில் ஒரு தங்கப் பனைமரம் தோன்றும், அந்த பனை மரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்கப் பனம்பழம் விழும், அதனை எடுத்து வாழ்க்கை நடத்தும்படி அந்த வேடனுக்கு முனிவர் கூறினார்.


அதனைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் வேடன். முனிவர் கூறியதுபோல் பனைமரம் தோன்றி அதிலிருந்து தங்கப் பனம்பழங்கள் விழுந்தன. இதன் மதிப்பு தெரியாத அந்த வேடன் அந்த பகுதியில் இருந்த ஒரு வர்த்தகரிடம் தங்கப் பனம்பழத்தை கொடுத்து தேவையானவற்றை வாங்கிவந்தான்.


இந்த விஷயம் சோழமன்னனுக்கு கிடைக்க, வணிகரை அழைத்து விவரங்களை கேட்ட அவர், வேடனை காவலாளிகள் மூலம் அழைத்து வரச்செய்தார். பனை மரம் இருக்கும் இடத்திற்கு மன்னனும், வேடனுடன் சென்றார். தங்கப்பழம் விழுந்தது. மறுநாள் முதல் பழம் விழவில்லை. தவறை உணர்ந்த மன்னன், எளியவனுக்கு உதவிய இறைவன், எமக்கு அருளவில்லையே என வருந்தினான். அன்றிரவு மன்னன் கனவில் முனிவர் வேடத்தில் தோன்றிய சிவன், எல்லாம் எமது திருவிளையாடல். வனவிலங்குகளை வேடனிடம் இருந்து காப்பாற்றவே, யாம் அவனுக்கு அருளினோம்.


எல்லா செல்வங்களும் பெற்ற உம்மிடம் அவனைச் சேர்த்துள்ளோம். வேடனுக்கு தெரிந்த வேலையை நீவீர் கொடுத்து அவனை வாழ்விப்பீராக என கூறினார் முனிவர் வேடத்தில் தோன்றிய ஈஸ்வரர். (முனி+ஈஸ்வரர்) முனீஸ்வரர். வேடனுக்காக மன்னனிடம் பரிந்துரைத்த சிவபெருமான்) அதிகாலை கண் விழித்த மன்னன், வேடனிடமிருந்து பெற்ற தங்கப் பனம்பழத்தைக் கொண்டு திருவரங்குளத்தில் சிவன் கோயிலை கட்டினார். இந்த சிவன் கோயில், ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.


தங்க பனைமரம் உருவாகி தங்கத்தில் பனம் பழம் கிடைத்ததால், இந்த பகுதி பொற்பனைக் கோட்டை (பொன்+பனை+கோட்டை) என்று அழைக்கப்படுகிறது. இந்த பொற்பனைக்கு காவல் தெய்வமாக முனீஸ்வரர் சிலை ஏழடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. காவல் தெய்வமாக இருப்பதால் கைகளில் ஆயுதம் ஏந்தி நிற்கும் இந்த சிலையானது ஒரே கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. பொற்பனை முனீஸ்வரரை வேண்டினால், தீராத கடனும் தீர்ந்துவிடும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.


திருச்சி அருகேயுள்ள புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6.கி.மீ தொலைவில் உள்ளது பொற்பனைக்கோட்டை. இது பழமையான முற்றிலும் சிதிலமடைந்த செங்கல் கோட்டையாகும். பொன்பரப்பின்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த பாழடைந்த கோட்டை 13-ஆம் நூற்றாண்டில் முத்தரைய மன்னரால் கட்டப்பட்டது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News