Kathir News
Begin typing your search above and press return to search.

முன்வினையே துன்பங்களுக்கு காரணம்- விளக்கும் புராண கதை

நாம் வாழ்வில் அனுபவிக்க கூடிய அத்தனை துன்பங்களுக்கும் நாம் செய்த முன்வினைகளை காரணம் என்பதை விளக்கும் அழகான ஒரு புராண கதையை பற்றி பார்ப்போம்.

முன்வினையே துன்பங்களுக்கு காரணம்- விளக்கும் புராண கதை
X

KarthigaBy : Karthiga

  |  15 Nov 2022 2:45 PM GMT

ஒருவர் நமக்கு துன்பம் விளைவித்தால் அவர்களை நாம் பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நாம் செய்த முன்வினைப் பயனும்கூட காரணமாக இருக்கலாம். ஆகையால் நமக்கு வந்து துன்பத்தில் இருந்து விடுபடுவதற்குதான் நாம் முயற்சிக்க வேண்டுமே தவிர நமக்கு துன்பம் விளைவித்தவர்களின் மீது கோபம் கொண்டு அவர்களை பழிவாங்க நினைக்கக் கூடாது. ராமாயண இதிகாசத்தில் அனுமனிடம் இதைப் பற்றி சீதை பிராட்டி சொன்ன நீதியை பார்ப்போம்.


ராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதை அசோகவனத்தில் பலம் பொருந்திய பல அரசிகளின் நடுவே காவலில் வைக்கப்பட்டிருந்தார். அந்த அரக்கிகள் இராவணனின் விருப்பத்திற்கு அடிபணியும்படி சீதையை தினமும் துன்புறுத்தி வந்தனர். ஆனால் அதற்காக சீதை அந்த அரக்கிகள் மீது கோபம் கொள்ளவில்லை. தனக்கு நேரும் துன்பத்திற்கு எல்லாம் தான் செய்த முன்வினை பயன்தான் காரணம் என்று நம்பினார். சீதையை திருப்பி அனுப்பும்படி ராமபிரான் பலமுறை ராவணனுக்கு தூது அனுப்பியும் அவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் வேறு வழியின்றி யுத்தம் தொடங்கியது. அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டார். அந்த செய்தியை அசோகவனத்தில் இருந்த சீரதையிடம் வந்து கூறினார் அனுமன். அதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற சீதை, நான் முன்பு ஒருமுறை உயிர்துறக்க நினைத்தபோது நீதான் வந்து என்னை காப்பாற்றி ராமர் விரைவில் என்னை மீட்பார் என்று கூறினாய். அப்போது உனக்கு சிரஞ்சீவியாக இருக்கும் வரம் அளித்தேன். இப்போது ராமரின் வெற்றி செய்தியை கொண்டு வந்திருக்கிறாய், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறினார். அதற்கு அனுமன் 'தாயே எனக்கு வரம் எதுவும் தேவையில்லை கடந்த பல மாதங்களாக உங்களை துன்புறுத்திய இந்த அரக்கிகளை தீயிட்டு கொளுத்துவதற்கு மட்டும் எனக்கு அனுமதி தாருங்கள்' என்று வேண்டினார்.


அதற்கு மறுப்பு தெரிவித்த சீதை, "இந்த அரக்கிகள் என்னை துன்புறுத்தினாலும் அவர்களை தண்டிப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் இந்த துன்பங்களுக்கு நான் செய்த முன்வினை பாவமே காரணம். பொன்மான் என்று நினைத்து மாயமானை ஆசைப்பட்டேன். அதை கொண்டு வர என் கணவரை அனுப்பினேன். அவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததாலும், லட்சுமணா, லட்சுமணா என்று அபயகுரல் எழுப்பியதாலும் பயந்து போன நான் எனக்கு காவலாக இருந்த லட்சுமணனை சென்று பார்த்து வரும்படி கூறினேன். அவர் என் கணவருக்கு எந்த ஆபத்து நேர்ந்திருக்காது என்று மறுத்து கூறியும், அதை ஏற்றுக் கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனை கண்டித்தேன். ஒரு பாவமும் அறியாமல் இரவு பகலாக எங்களை கண்ணிமை போல காத்து வந்த லட்சுமணனை மனம் நோகச் செய்ததுதான் நான் அனுபவித்த துன்பத்திற்கு காரணம். எனவே நீ அரக்கிகளை எதுவும் செய்து விடாதே" என்றார்.நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால் அதற்கு நாம் முன் செய்த தீவினை பயன்தான் காரணம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News