Kathir News
Begin typing your search above and press return to search.

மகிழ்ச்சியின் விதையாய் பிறந்தது தை! பொங்கலின் பெருமை போற்றுவோம்!

கதிர் வாசகர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

மகிழ்ச்சியின் விதையாய் பிறந்தது தை! பொங்கலின் பெருமை போற்றுவோம்!

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  14 Jan 2022 3:10 AM GMT

பொங்கலை வெறும் கொண்டாட்டத்திற்கான விழாவாக மட்டுமில்லாமல் பாரம்பரியத்தின் அடையாளமாக. ஒரு இனத்தின் குறியீடாக கருதுவது மரபு. இதனை வெறும் திருநாள், திருவிழா என அழைக்காமல் இதனை தமிழர் திருவிழா என்றே உலகம் அழைக்கிறது. காரணம் இது சமயங்களை தாண்டி, இன மத வேறுபாடுகளை தாண்டி மொழியினால் அடையாளப்படுத்தப்படுகிறது. நாடெங்கிலும் இருக்கும் தமிழர்கள் மட்டுமின்றி உலகெங்கும் இருக்கும் தமிழர்களின் விழாவகவே இது அறியப்படுகிறது.

"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" என்று கலித்தொகையும்


"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" என்று குறுந்தொகையும்

தை நன்நாளை போற்றி பாடிய குறிப்புகள் நம் சங்க இலக்கியத்தில் உண்டு. இதன் மூலம் பொங்கல் என்பது இன்று நேற்று உருவான ஒரு விழா அல்ல. இது நம் மரபு, இது நம் கலாச்சாரம் என்பது தெளிவாகிறது.

பொங்கல் என்பதற்கு சமைத்தல் என்ற பொருளும் உண்டு. அதுமட்டுமின்றி தையின் முதல் நாளை மக்கள் கொண்டாட மற்று மொரு காரணம், அடி திங்களில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அறுவடையின் மூலம் கிடைக்கும் பொருட்களான புத்தரிசியை, வெல்லம், பால், நெய் சேர்த்து புத்தடுப்பில் கொதிக்க வைத்த பொங்கச்செய்கிற வளத்தின் பெருக்கத்தை குறிப்பதாகவே நாம் எண்ணி மகிழ்கிறோம்.

உழைக்கும் உழவர்களின் உழைப்பை, உழவுக்காக தங்கள் பங்களிப்பை அளிக்கும் கால்நடைகளை, நம் எல்லா உயிரின ங்களுக்கும் அடிப்படையாக விளங்குகிற சூரிய ஒளியை, சூரியனை, நமக்கான உணவினை வழங்க நமக்கு ஒத்துழைப்பு அழைக்கும் இயற்கையை என அனைத்தையும் நன்றி கூறி வணங்கும் ஓர் உன்னத திருவிழா பொங்கல் விழா.

இது ஒரு மொழியின் அடையாள விழாவாக கருதப்பட்டாலும், இதே நாள் வெவ்வேறு அடையாளத்துடன் இந்தியாவின் பிற பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும், மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது

நான்கு நாள் விழாவாக பொங்கல் கொண்டாட்ங்கள் இன்று விரிந்திருப்பது சிறப்பு. பழைய கழிந்து புதியன புகுத்தும் மார்கழியின் இறுதி நாள் போகி எனவும், அதனை தொடர்ந்த முதல் நாள் பொங்கல் என்றும் பின் கால் நடைகளுக்கு நன்றி சொல்லும் நன்னாளாக மறு நாள் மாட்டுபொங்கல், பின் உறவினர்களை கண்டு மனகளிப்புற அன்பையும் பொங்கலையும் பரிமாறும் நாளை காணும் பொங்கல் என்றும் இன்று கொண்டாடுகிறோம்.

பொங்கல் போலே ஒவ்வொறு இல்லத்திலும் வளமும், நலமும், உற்சாகமும் பொங்க வேண்டும் என்பதே இந்த பண்டிகையின் தார்பரியம்.

இந்த இனிய நன்னாளில்…. கதிர் வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் இனிமையான பொங்கல் நல்வாழ்த்துகள்!!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News