கடன் தொல்லை தீர காலபைரவருக்கு வெண் பூசணி தீபம் போட சொல்வது ஏன்?
By : Kanaga Thooriga
பைரவர் என்பவர் சிவபெருமானின் ஆக்ரோஷமான ரூபம். பிரபஞ்சத்தின் எட்டு திசைகளின் காவலராக, எட்டு தத்துவங்களை வெளிப்படுத்துபவராக பைரவர் இருக்கிறார். எட்டு என்கிற எண் பைரவருடன் நெருங்கிய தொடர்புடையது. ஒவ்வொரு பைரவருக்கு கீழ் எட்டு துணை பைரவர்கள், அவர்களில் ஒவ்வொருவருக்கும் கீழ் எட்டு இணை பைரவர்களளென மொத்தம் 64 பைரவர்கள் உண்டு.
ஆன்மீக மேம்பாட்டிற்கு, ஜோதிட ரீதியான வழிகாட்டுதலுக்கு, நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பரிகார துணை செய்ய என அனைத்து வகையிலும் பக்தர்களுக்கு உற்ற துணையாக இருப்பவர் பைரவர்.
கால பைரவர் என்ற பெயரிலேயே காலம் என்ற சொல் உண்டு. பைரவர் என்பவர் காலத்தின் அதிபதி. ஒருவருக்கு நல்ல காலம் ஏற்படுகிற போது சகல விதத்தில் நன்மைகள் நடப்பதும், ஒருவருக்கு கெட்ட காலம் நெருங்குகிற போது எல்லா வகையில் தீமை நடப்பதும் இயல்பு. அதுபோன்ற துயரமான நேரங்களில் பைரவரை வணங்குகிற போது அவரால் தீய நேரத்தை நல்ல நேரமாக மாற்ற முடியும். காரணம் அவரே காலத்தின் அதிபதி.
காலபைரவருக்கு மற்றொரு பெயரும் உண்டு, அது “ஷேத்திர பாலகர்” என்பது. இதனால் திருக்கோவிலின் நடையை அடைக்கிற போது கோவிலின் சாவியை பைரவரிடம் கொடுப்பதும், மீண்டும் அதிகாலை அவரிடமே சாவியை பெற்று கோவிலை திறப்பதும் ஒரு சடங்காகவே இன்றும் நடைபெறுவதுண்டு. பெளர்ணமி முடிந்த எட்டாம் நாள் வரும் பிறை நிலவில் பைரவரை வழிபடுவது மிகவும் விஷேசமாகும். அந்த நாளை கால பைரவ அஷ்டமி என்றும் அழைப்பர்.
தொழிலில் முடக்கம், கடன் தொல்லை, வேலை இடத்தில் பிரச்சனை, போன்றவை தீர கால பைரவருக்கு ராகுகாலத்தில் விளக்கு போடுவது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் வழக்கமாகும். மிளகு, எள்ளில் தீபமேற்றுவது வழக்கம். வித்தியாசமாக கால பைரவருக்கு பலர் வெண் பூசணியில் விளக்கேற்றுவார்கள். அடிப்படையில் வெண்பூசணி என்பது நல்லதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டதாகும். அதனால் தான் திருஷ்டி கழித்து உடைக்கும் போது, வீட்டில் திருஷ்டிக்காக கட்டும் போது என பல இடங்களில் வெண் பூசணியை பயன்படுத்துகிறோம்.
எனவே ஒருவர் தீய சக்திகளால் ஏவப்பட்டிருந்தாலோ, கடன் தொல்லை இருந்தாலோ வெண் பூசணியில் இராகு காலத்தில் விளக்கேற்றி வர சகல பிரச்சனையும் தீரும் என்பது நம்பிக்கை