சர்ப்ப தோஷங்களை போக்கும் - தச்சூர் பிக்சீஸ்வரர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது தச்சூர் என்ற ஊர். இங்கு எல்லாவித சர்ப்ப தோஷங்களில் இருந்து விடுதலை தருகின்ற பிச்சீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
By : Karthiga
இந்த பிரபஞ்சத்தை அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன் குளிகன் ,பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு நாகங்கள் தாங்கிக் கொண்டிருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இந்த எட்டு பேரும் தான் அனைத்து நாகங்களுக்கும் தலைமையானவர்கள். இந்த எட்டு சர்ப்ப ராஜாக்களும் வலிமை , தலைமை பதவி, தீர்காயுள் ஆகிகய வரங்கள் வேண்டி பூமியிலிருந்து சிவாலயங்கள் பலவற்றிற்கு சென்று சிவலிங்க பூஜை செய்திருக்கிறார்கள் .அந்த வகையில் இந்த எட்டு சர்ப்பங்களும் ஒன்றாக சேர்ந்து தன் இனத்தவர்கள் ஆன சர்ப்பங்கள் மனிதர்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் செய்த பாவங்களுக்காக விமோசனம் வேண்டி வழிபட்டது இந்த ஆலயம் என்கிறது ஆலய தலை வரலாறு.
பழங்காலத்தில் தச்சூர் என்ற இடம் வாசனை மிகுந்த முல்லை வகையை சேர்ந்த பிச்சி மரங்கள் நிறைந்த பிச்சி வனமாக இருந்தது. இந்த வனத்திற்குள் தான் சுயம்புவாக தோன்றிய பிச்சீஸ்வரர் இருந்தார் .அவரை அனுதினமும் எட்டு சர்ப்பங்களும் பிச்சி மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தனர் .இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அந்த எட்டு சர்ப்பங்களின் முன்பாகவும் தோன்றி உலகில் உள்ள அனைத்து சர்ப்பங்களின் பாவங்களையும் ,சாபங்களையும் போக்கி அவர்களுக்கு என்று தனி உலகத்தை ஏற்படுத்திக் கொடுத்து அருளினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த எட்டு நாகங்களும் இன்றும் இத்தல ஈசனை வழிபாடு செய்து வருவதாக நம்பப்படுகிறது.
பல நாகங்கள் இந்த பகுதியில் உலாவுவதை வளாகத்திற்குள் வரும் பக்தர்கள் அதற்கு சான்றாக காட்டுகின்றனர். சதா சர்வ காலமும் சிவபெருமானையே சிந்தித்துக் கொண்டிருக்கும் சித்தர்களில் ஒருவர் அகப்பேய் சித்தர் . இவர் தினமும் அருவமாக இத்தலத்திற்கு வந்து அரவங்கள் வழிபட்ட சிவனை வழிபட்டு செல்வதாக அகத்தியர் நாடி சொல்கிறது. அகப்பேய் சித்தர் வழிபடும் சமயம் சில அபூர்வ நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளதாக இந்த ஊர் மக்கள் சிலாகித்துக் கூறுகின்றனர் .சோழர் காலத்திற்கு முன்பு இந்த ஆலயத்தின் சிவலிங்கம் புற்றுக்குள் மறைந்திருந்தது. ஒருவரின் கனவில் இங்கு சிவலிங்கம் இருப்பதாக தெரியவர இந்த புற்று அகற்றும் பணி நடைபெற்றது .அப்போது கடப்பாரை புற்றுக்குள் இருந்த சிவலிங்கத்தின் மேற்பட்டு ரத்தம் வந்ததாகவும் ஈச்சம் கீற்றுகளை கொண்டு சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் தைத்ததாகவும் ஒரு செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.
ஆரம்பத்தில் தையலூர் என்று அறியப்பட்டு வந்த இந்த ஊர் தற்போது தச்சூர் என்று அழைக்கப்படுகிறது .இந்த ஆலயத்தை முதலாம் பராந்தகச் சோழன் கட்டியிருக்கிறார்.ஆனால் அந்த கட்டிடம் பல்வேறு காரணங்களால் வழிபாடு இல்லாமல் சிதைவை சந்தித்தது. இதனால் ஊர் மக்கள் நன்கொடையால் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. தச்சூர் ஊரின் வடகிழக்கு திசையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. ஆலயத்தின் தெற்கு புற வாசலின் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும். ஆலயத்திற்குள் நுழைந்து முதலில் நிருதி மூலையில் இருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். அடுத்ததாக வள்ளி - தெய்வானை உடனாய ஆறுமுகப்பெருமானை வணங்கலாம்.
ஆலயத்தின் மேற்கு தாழ்வாரத்தில் வீரபத்திரரும் அவர் கருகாமையில் சர்ப்ப ராஜாவும் காட்சி தருகின்றனர் .அழகான சிற்பங்களுடன் கூடிய 21 தூண்கள் கொண்ட பிரம்மாண்டமான முன் மண்டபம், ஸ்தான மண்டபம் ஆகியவை காணப்படுகின்றன .அவற்றை தொடர்ந்து அர்த்த மண்டபம் மற்றும் மூலஸ்தானம் இருக்கிறது . ஆலய கருவறைக்குள் சதுர வடிவ ஆவுடையாருடன் சுயம்பு மூர்த்தமாக பேரருள் பொழிகின்றார் பிச்சீஸ்வரர். சர்ப்ப சாபம் ,சர்பதோஷம் மற்றும் கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வருகை தந்து பிச்சீஸ்வரரையும் பிரகன்நாயகி அம்மனையும் வழிபாடு செய்கின்றனர்.
மேலும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சாற்றி , அபிஷேகம் செய்வதுடன் முல்லை மலர்களால் அர்ச்சித்தும், பால் பாயாசம், அக்காரவடிசல் படைத்தும் வழிபட்டால் அனைத்து சர்ப்ப தோஷங்களும் நீங்குவதாக சொல்லப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் ஆரணியில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 10 கிலோோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தச்சூர்.