Kathir News
Begin typing your search above and press return to search.

சாது சொன்ன இல்லற ரகசியம் - சீடனின் கேள்வியும் முனிவரின் பதிலும்

குருவிடம் அவரது சீடர்களில் ஒருவன் ஒரு கேள்வியை முன்வைத்தான். அந்த கேள்விக்கு சாது சொன்ன சாதுரியமான பதில்

சாது சொன்ன இல்லற ரகசியம் - சீடனின் கேள்வியும் முனிவரின் பதிலும்

KarthigaBy : Karthiga

  |  21 Sep 2022 1:15 PM GMT

குருவிடம் அவரது சீடர்களில் ஒருவன் ஒரு கேள்வியை கேட்டான். "குருவே இல்லறம் பல துன்பங்களை தரக்கூடியது என்றாலும், பலரும் அதனை விரும்புகிறார்கள் அப்படி என்ன ரகசியம் தான் அந்த இல்லறத்தில் இருக்கிறது". என்றான் .இதற்கான பதிலை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறினார் குரு .அடுத்த சில தினங்களில் குரு அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று அவர் முன்பாக வந்து நின்றது. அப்போது குருவின் அருகில் சீடனும் இருந்தான். அந்த பறவை சுவாமி நான் இந்த உலகத்தை சுற்றி பார்க்க ஆசைப்படுகிறேன். அதன் முதல் கட்டமாக கடலின் நடுவே ஆயிரம் காத தூரத்தில் அமைந்த ஒரு தீவைப் பார்க்க விரும்புகிறேன். அதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டது. உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியாது. ஆனால் முயற்சி செய்வதில் எந்த தவறும் இல்லை .தாராளமாக பயணம் செய் .ஆனால் ஒரு விஷயத்தை நினைவில் கொள் .பயணத்தின் போது முதன்முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது நீ உடனடியாக புறப்பட்டு எடுத்திருக்கே திரும்பி விட வேண்டும் என்றார் குரு.


சரி என்று சொன்ன பறவை அங்கிருந்து புறப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு திரும்பி வந்தது .சுவாமி கடலின் மேல் பறந்து கொண்டிருந்தபோது 200 காத தூரத்தில் சோர்வடைந்தேன் அதனால் நீங்கள் சொன்னபடி திரும்பிவிட்டேன். கரைக்கு வந்ததும் தான் தெரிந்தது நீங்கள் சொன்னபடி திரும்பி இருக்காவிட்டால் கடலில் விழுந்து இறந்திருப்பேன். இருந்தாலும் என்னுடைய முயற்சியை தொடர விரும்புகிறேன் என்றது. அதைக் கேட்ட குரு சரி, அப்படியானால் இந்த முறை உன்னுடைய துணையை அழைத்துச் செல் .ஆனால் இந்த முறை நீங்கள் இருவரும் இரண்டாவது முறையாக சோர்வடையும்போது உடனடியாக கரைக்கு திரும்பி விட வேண்டும் என்றார். அதன்படியே தனது துணையுடன் பயணத்தை தொடர்ந்தது பறவை. இருந்து வாரங்கள் கழிந்து இருண்ட பறவைகளும் திரும்பி வந்தன சுவாமி எங்களால் 400 காத தூரம் தான் கடலின் மேல் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்ததும் திரும்பிவிட்டோம். மீண்டும் ஒருமுறை முயற்சி செய்ய எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்டது பறவை.


சரி... இந்த முறை உங்களுடன் ஒரு குச்சியை எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது இந்த குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும் அந்த குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள். இப்படியே சோர்டையும் போது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று யோசனை சொன்னார் குரு. இந்த முறை குச்சியோடு சென்ற பறவைகள் இரண்டு மாதங்களுக்கு பிறகு திரும்பி வந்தன .சுவாமி உங்கள் ஆசையால் எங்களால் ஆயிரம் காத தூரத்தில் உள்ள தீவை சுற்றி பார்த்தோம். வழியில் சோர்வடையும் போதெல்லாம் குச்சியை கடலில் போட்டு ஓய்வெடுத்தோம் என்றது பறவை. "நல்ல விஷயம் ஆனால் குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?" என்று கேட்டார் குரு. அதற்கு அந்த பறவை சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது. ஆனால் கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போது தான் குச்சியை நாங்கள் சுமக்கவில்லை .குச்சி தான் எங்களை சுமக்கிறது ,காப்பாற்றுகிறது என்று உண்மையை புரிந்து கொண்டோம் என்று கூறியது அந்த பறவை.


இப்போது தன்னுடன் இருந்த சீடனிடம், பறவை சொன்னதை கேட்டாயா? இல்லத்தில் ரகசியம் பற்றி கேட்டாயே அதற்கான பதில் இதில் தான் இருக்கிறது. பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. இரண்டாவது முறை அதிக தூரம் பறக்க முடிந்தது. அதற்கு காரணம் அதன் துணை. ஆனாலும் இருவராலும் இலக்கை அடைய முடியவில்லை அவர்கள்இலக்கை அடைய குச்சி என்ற கருவி அவசியமானது அந்த குச்சி அவர்களுக்கு சுமையானது. சண்டையை உருவாக்கியது. ஓய்வை கொடுத்தது இறுதியில் இலக்கை அடையவும் உதவியது. பறவைகளுக்கு குச்சியை போலத்தான் மனிதர்களுக்கு இல்லறம் ஒரு கருவியாக இருக்கிறது. சம்சாரம் எனும் பிறவி கடலை கடக்க அந்த கடலில் குதிக்க வேண்டியது இல்லை ,நீந்த வேண்டியதில்லை ,இல்லறம் என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம் .அதே நேரம் கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றம் தென்பட்டாலும் உண்மையில் இல்லறமே அவர்களை வழிநடத்துகிறது. அதுவே இல்லற ரகசியம் என்றார் குரு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News