'திருக்கோலக்கா' என்று அழைக்கப்படும் சப்தபுரீஸ்வரர் ஆலயம்
சீர்காழியில் சப்தபுரீஸ்வரர் என்று அழைக்கப்படும் ஆலயம் அமைந்துள்ளது. அதன் சிறப்பு பற்றி காண்போம்.
By : Karthiga
பார்வதி தேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞானசம்பந்தர் பல கோவில்களுக்கு சென்று தனது அழகிய சிறு கைகளால் தாளம் தட்டி இறைவனை பாடி வந்தார். இதனை பார்த்த சிவன் திருஞானசம்பந்தரின் கைகள் வலிக்காமல் இருப்பதற்காக தங்கத்தால் ஆன தாளங்களை கொடுத்தார். அவற்றை தட்டிப் பார்த்தார் திருஞானசம்பந்தர்.ஆனால் அதிலிருந்து எந்த சத்தமும் எழவில்லை. உடனே அங்கிருந்து அம்பாள் அவர் தட்டும் போது அதிலிருந்து ஓசை வருமாறு செய்தார். எனவே தான் இத்தலத்தின் இறைவன் சப்தபுரீஸ்வரர் அல்லது தாளபுரீஸ்வரர் என்றும் அம்பாள் ஓசை நாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
கோவிலின் வாசலிலேயே தாளம் கொடுத்த இறைவனும் ஓசை கொடுத்த நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா வளமும் நலமும் சுபிட்சமும் அருளக்கூடியவள். இத்திருத்தலத்தில் தவமிருந்து திருமாலை மகாலட்சுமி இணைந்த காரணத்தினால் இத்தலம் திருக்கோலக்கா என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள அம்பாள் சன்னதியில் சொற்பொழிவாற்றுபவர்களும் பாடல் பாடுபவர்களும் மிகப்பெரிய புகழை அடைவார்கள் என்பது நிதர்சனமான உண்மை .
இசையில் சிறந்த புகழை அடைய விரும்புபவர்கள் இத்தலத்திற்கு வந்து ஈசனையும் அம்பாளையும் வணங்கினால் அவர்கள் ஆசை நிச்சயமாக நிறைவேறும். இத்தலத்தின் மகாலட்சுமி தவமிருந்து திருமாலை திருமணம் செய்த காரணத்தினால் இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களின் திருமண தடை அகலும். விரைவில் நல்லவரன் கைகூடும். அனைவரும் சீர்காழிகள் உள்ள சப்தபுரீஸ்வரர் ஆலயம் சென்று நாமும் இறைவன் இறைவியின் அருளை பெறுவோம்.