புரட்டாசி சனிக்கிழமையில் விரதமிருப்பதால் ஏற்படும் ஆச்சர்ய நன்மைகள்
By : Kanaga Thooriga
மாதங்களில் மார்கழி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு மாதங்களுள் தனக்கே உரிய பெருமையை, மகிமையை கொண்டிருக்கும் சூழலில். நம் மரபில் புரட்டாசிக்கென தனி இடம் உண்டு. ஆன்மீக முக்கியத்துவம் நிறைந்த மாதமாக நம் மரபில் இது கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகள் ஒவ்வொன்றும் விஷ்ணு பெருமானை அடைவதற்கான் வழியாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ் மாதத்தில் 6 ஆவது மாதமாக வரும் புரட்டாசியில் பெருமாளை வணங்கினால் அவருடைய அருள் மழையில் நாம் நனைவது உறுதி. எத்தனையோ மாதங்கள் இருக்க ஏன் வெங்கடேசருக்கு புரட்டாசி என்றால் இத்தனை சிறப்பு என்கிற கேள்விக்கு பல்வேறு புராண வரலாறுகள் உண்டு
முக்கியமாக, மஹா விஷ்ணு திருப்பதி வெங்கடாசலபதியாக திருப்பதி மலையில் அவதாரம் செய்த மாதம் இது என்பது தொன் நம்பிக்கை. அதுமட்டுமின்றி இந்த மாதத்தின் சனி பகவான் தன்னுடைய தாக்கத்தை குறைத்து கொள்வார் என்பது ஐதீகம். எனவே சனிபகவான் மற்றும் விஷ்ணு பிரானின் அருளை ஒரு சேர பெரும் அரிய வாய்ப்பு இந்த புரட்டாசி மாதம் உதவுகிறது
அதன் பொருட்டு பலரும் புரட்டாசி மாதம் முழுவதும் குறிப்பாக சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது வழக்கம். சுத்த சைவமாக இருந்து, சனிக்கிழமைகளில் ஒரு நேரம் மட்டுமே உணவு கொண்டு விரதமிருப்பர். இன்னும் பலர் அவர்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப கடுமையான விரதங்களை மேற்கொள்வது உண்டு. சனிக்கிழமை தோறும் பெருமாளுக்கு மாவிளக்கு செய்வது சிறப்பு. மேலும் பெருமாள் ஸ்தோத்திரங்களை சொல்லி பாராயணம் செய்வதும் உகந்தது.
விரதமும், அர்ப்பணமும் எதை செய்கிறோம் என்பதில் அல்ல எவ்வளவு பக்தியோடு செய்கிறோம் என்பதை பொருத்தே அமைகிறது. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியம், அளவில்லா மகிழ்ச்சியும் கிடைக்கும். அதுமட்டுமின்றி சனியின் பாதிப்பில் இருப்பவர்களுக்கு சனியின் பாதிப்பு குறையும். தீய ஆற்றல்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி நல்ல ஆற்றால் சூழ்ந்திருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக முக்தியை அடைவதற்கான் பாதையாக இந்த புரட்டாசி வழிபாடு திகழ்கிறது.