மனநோய் நீக்கும் ஆச்சர்ய திருமால்! குணசீலம் வெங்கடாஜலபதி ஆலய அதிசயம்.
By : Kanaga Thooriga
குணசீலம் பெருமாள் கோவில் விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலமாகும். திருச்சியிலிருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இக்கோவில். காவேரியின் வடக்கரையில் இக்கோவில் அமைந்திருப்பது மற்றொரு தனிச்சிறப்பு.
குணம் என்பது குணப்படுத்துதலையும், சீலம் என்பது இடம் என்ற பொருளில் குறிக்கப்படுகிறது. தீரா வினைகளை, தீரா நோய்களை தீர்க்கும் இடம் குணசீலம் என்பதற்கு இதற்கு பொருள். இங்கிருக்கும் மூலவர் பிரசன்ன வெங்கடாஜலபதி என்ற திருப்பெயரிலும், உற்சவர் ஶ்ரீனிவாசர் என்ற திருப்பெயரிலும் அழைக்கப்படுகின்றனர்.
இக்கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், குணசீலர் என்ற பக்தர் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்து இந்த இடத்திற்கு திரும்பி வெங்கடாஜலபதியின் தரிசனம் வேண்டி தீவிர தவமியற்றினார். அப்போது அவருக்கு அருள் பாலித்து இங்கே தரிசனம் கொடுத்த பெருமாள் பக்தரின் வேண்டுகோலுக்கு இணங்க இங்கேயே தங்கினார். அவருக்கு தொடர்ந்து பூஜை வழிபாடுகள் என செய்து வந்த குணசீலரை அவரின் குருவான தால்பியா மஹரிஷி தன்னோடு வரும்படி அவரை அழைத்தார். குருவின் சொல்லை மீற முடியாத குணசீலர் அவருடைய சீடரிடம் இறைவனுக்கான பூஜை பொறுப்பை ஒப்படைத்து சென்றார். அக்கோவில் அமைந்திருந்த இடம் காட்டு பகுதி என்பதால், அந்த சீடரால் அந்த பூஜையை தொடர்ந்து செய்ய முடியவில்லை.
காலம் செல்ல செல்ல இறைவனை புற்று மூடியது. பின்பு அந்த பகுதியை ஞானவர்மன் என்ற சோழ மன்னன் ஆண்ட போது, அவர் குணசீலம் எனும் இப்பகுதிக்கு அன்றாடம் வருவார். அப்போது அரண்மனை பசுக்கள் இந்த பகுதிக்கு மேய்ச்சலுக்கு வருவது வழக்கமாக இருந்தது. அந்த பசுக்கள் கறக்கும் பால் தீடிரென மாயமாகவே, ஒரு முறை அசரீரி ஒலித்தது. அந்த அசரீரீயை கேட்டு அந்த திருக்கோவிலை கண்டெடுத்து மன்னன் மீட்ட போது பெருமாள் பிரசன்ன வெங்கடாஜலபதியாக காட்சி கொடுத்தார்.
இந்த தலம் மனக்குழப்பத்தில் இருப்போருக்கும், மன நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் தீர்வு தரும் மையமாகவும் செயல்படுகிறது. மனநோயால் பாதிக்கபட்டோர் இங்கே 48 நாட்கள் தங்கியிருந்து விரத முறைகளை மேற்கொண்டு, காவிரியில் நீராடுவதால் நன்மை நிகழ்கிறது என நம்புகின்றனர். மேலும் திருப்பதி வெங்கடாஜலபதியை போலவே இவரும் காட்சி தருவதால், திருப்பதி செல்ல முடியாதோர் இங்கே இவரை வழிபடுவதால் திருப்பதியில் தரிசித்த பலனை பெறுவார்கள்.