பெளர்ணமியில் சிறப்பு வழிபாடு ஏன்? அதனால் ஏற்படும் ஆச்சர்ய நன்மைகள்!
By : Kanaga Thooriga
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கோள்களுக்கும் பிரத்யேக முக்கியத்துவமும், பலன்களும் உண்டு. ஒவ்வொரு கோள்களும் மனிதர்களின் உடல்நிலை மற்றும் மனநிலையின் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கத்தை ஏற்படுத்த கூடியவை. அந்த கோள்கள் பூமியிலிருந்து அமைந்துள்ள தூரத்தை பொருத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பலன்கள் மாறும்.
அதிலும் குறிப்பாக நிலவெனும் சந்திரன் மனநிலை மற்றும் உணர்வுநிலையுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. காரணம் பூமியுடன் அதற்கு இருக்கும் நெருங்கிய தொடர்பு. இந்த நெருக்கமான தொடர்பினால் மனிதர்களின் வாழ்வில் மிக முக்கியமான இடம் சந்திரனுக்கு உண்டு.
நம் நாட்டுபுற வழக்கத்தில் கூட ஒருவருக்கு மனநிலை பிறழ்வு ஏற்பட்டால் அதற்கான வைத்தியத்தை அமாவசை, பெளர்ணமியில் செய்வதை பார்க்க முடியும். கோவில்களில் கூட பெளர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக பெளர்ணமி என்பது மிகவும் சக்தி வாய்ந்த தினமாக இந்து நாள்காட்டியில் கருதப்படுகிறது. அடிப்படையில் பெளர்ணமி என்பது முழு நிலவு தினம், இந்நாளில் அறியாமை எனும் இருள் அழிந்து ஞானமெனும் பிரகாசம் மலர்வதாக கருதப்படுவதுண்டு.
மேலும் அபரிமீதமான வெளிச்சம், செல்வம், மகிழ்ச்சி இவற்றை வாரிக்கொடுப்பதன் குறியீடாகவும் பெளர்ணமியை கருதலாம். இதனாலேயே பல நல்ல காரியங்களை பெளர்ணமியில் செய்வார்கள். மேலும் அந்த நாளில் நேர்மறையான ஆற்றல் நிரம்பியிருப்பதால் யாகம், பூஜை, ஹோமம் ஆகியவற்றிற்கு பெளர்ணமியை தேர்வு செய்வது வழக்கம்.
மேலும் நாம் வணங்கும் கடவுள்களின் அவதார நன்னாளும் பெரும்பாலும் பெளர்ணமிகளில் இருப்பதை நாம் காண முடியும். அறிவியல் பூர்வமாகவும் பெளர்ணமி நாளில் ஈர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இது மனிதர்களின் நல்வாழ்வில் பல நல்ல தாக்கங்களை ஏற்படுத்த வல்லது. குறிப்பாக பெளர்ணமி நாளில் மனிதர்களின் உடல்நிலையிலும் மனநிலையிலும் நல்ல சமநிலை ஏற்படும். இதனாலேயே தியானம் செய்வதற்கு ஏற்ற தினமாக பெளர்ணமி கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம் கூட பெளர்ணமி நாளில் செய்யப்படுவது இதனால் தான்.
நமது இஷ்ட தெய்வம், குலதெய்வம் ஆகியோரை பெளர்ணமி நாளில் வணங்குவதால் அவர்களின் அருளை பெற முடியும். மற்ற நாட்களிலும் அவர்களின் அருளை நாம் பெற முடியும் என்றாலும், நம்முடைய உடல்நிலையும் மனநிலையும் நல்ல அதிர்வுகளை, நல்ல ஆசிர்வாதங்களை ஏற்கும் தன்மையில் மற்றா நாளை விட பெளர்ணமியில் சற்று கூடுதலாக இருக்கும் என்பது சிறப்பு.