சிக்கல் சிங்கார வேலன் ஆலயம் முருக பெருமான் திருக்கோவில்களில் மிக முக்கியமானது !
The Sikkal Singaravelan.
By : G Pradeep
சிக்கல் சிங்கார வேலன் ஆலயம் முருக பெருமான் திருக்கோவில்களில் மிக முக்கியமானது. காரணம் ஆறுபடை வீடிற்கு அடுத்தபடியாக, ஏழாவது படை வீடாய் இருக்கும் அளவு முக்கியத்துவம் பெற்றது என பக்தர்கள் நம்புகின்றனர். இந்த கோவில் ஆச்சர்யமான அமைப்பாக முருக பெருமான் ஆலயத்தில் சிவன் மற்றும் விஷ்ணு பெருமான் இருவரும் இங்கே அமைந்து அருள் பாலிக்கின்றனர்.
இந்த கோவில் தமிழகத்தில் நாகபட்டிணம் அருகே சிக்கல் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், நாகபட்டிணத்திலிருந்து மேற்கே 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சிக்கல் நவனீதஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர். அதில் சிங்காரவேலன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. விண்ணுலகத்தில் இருக்க கூடிய காமதேனு பசு ஒருமுறை பஞ்சம் காரணமாக மாமிசம் உண்டுவிட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் அந்த பசுவிற்கு சாபம் வழங்கினார். சாபத்தினால் மிகவும் கவலையுற்ற காமதேனு, இறைவனிடம் இறைஞ்சி சாப விமோசனம் கோரினார். மனம் இறங்கிய சிவபெருமான் பூலோகத்தில் மல்லிகை வனம் உண்டு அங்குள்ள தலத்தில் நீராடி அங்குள்ள இறைவனை வணங்கினால் சாபம் நீங்கும் என அருளினார். அதன்படியே இன்றைய கோவில் அமையப்பெற்றுள்ள இடத்தில் உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றார் காமதேனு. அதன் பொருட்டு காமதேனு பசுவின் மடியில் பெருகிய பால் பாற்குளத்தை உருவாக்கியது. அதுவே இன்றும் புனிதகுளமாக கருதப்படுகிறது. வசிஸ்ட மாமுனி, அந்த பாலில் இருந்து கிடைத்த வெண்ணையை கொண்டு அங்கேயே சிவலிங்கம் வடித்து வழிபட்டார். தன்னுடைய பூஜை முடிந்த பின்பாக அந்த சிவலிங்கத்தை அவர் எடுக்க முற்பட்ட போது அது சிக்கி கொண்டு வர மறுத்தது அதன் பொருட்டே இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது என்பது நம்பிக்கை.
மேலும் இங்கிருக்கும் முருக பெருமானிடம் ஒரு அதிசயம் நிகழ்வதுண்டு. அதாவது சுரபத்மனை வதைக்க இந்த இடத்தில் தான் முருக பெருமான் சக்தி தேவியிடம் வேல் வாங்கினார் என்கிறது புராணம். எனவே இங்கிருக்கும் அம்பால் வேல் நெடுங்கண்ணி என்று அழைக்கப்படுகின்றனர். சூர சம்ஹார நடைபெறும் நாளில் இங்கே அம்பாளிடம் இருந்து முருகன் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அவ்வாறு அவர் வேல் பெறும் ஒவ்வொரு முறை முருகனுக்கு வியர்ப்பதை கண்கூடாக கண்ட பக்தர்கள் பலர் உள்ளனர்.
எனவே சிக்கல் சிங்கார வேலனை வணங்கினால் சிக்கல் தீரும் என்பது திண்ணம்.
Image : Maalaimalar