Kathir News
Begin typing your search above and press return to search.

இலந்தை மரத்திலிருந்து காட்சி கொடுத்த சோமநாதர்

திருநெல்வேலியில் இருந்து களக்காடு செல்லும் வழியில் உள்ளது தேவநல்லூர். பழமையான ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோவில் பச்சையாற்றகரையில் அமைந்துள்ளது.

இலந்தை மரத்திலிருந்து காட்சி கொடுத்த சோமநாதர்
X

KarthigaBy : Karthiga

  |  24 Oct 2023 5:30 PM GMT

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை வீர மார்த்தாண்டன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் ஒருமுறை வேட்டைக்காக சென்றபோது காட்டின் ஒரு பகுதியில் சற்று இளைப்பாரினான். அப்போது அவன் தூரத்தில் ஒரு காட்சியை கண்டான். ஒரு வேட்டை நாய் முயலை துரத்திக் கொண்டிருந்தது . முன்னாள் ஓடிக் கொண்டிருந்த முயல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள இலந்தை மரத்தின் அருகே வந்ததும் திடீரென திரும்பி நாயை பார்த்து எதிர்த்து நிற்க நாய் பயந்து ஓடிவிட்டது.


மறுநாளும் இதே போல் வேட்டைக்கு வந்த இடத்தில் வேட்டை நாய் முயலை விரட்ட அது இலந்தை மரத்தின் அருகே வந்து எதிர்த்து நிற்க நாய் பயந்து ஓடியது. தொடர்கதை ஆகிப்போன இந்த காட்சியால் மன்னன் அந்த இலந்தை மரத்தின் அருகில் தோண்டியபோது அங்கு சிவலிங்கம் ஒன்று இருப்பதை கண்டு மகிழ்ந்தான். அந்த இறைவனுக்கு பச்சை ஆற்றின் கரையில் ஒரு கோவிலை கட்டி அவருக்கு சோமநாதன் என்று பெயரிட்டு வழிபட்டான் .


இத்தலத்தில் இறைவியின் திருவுருவம் மிகவும் கலை நுணுக்கத்தோடும், மந்தகாச புன்னகையுடனும் , பேசும் பொற்சித்திரமாகவும் , இறைவனின் உள்ளத்திலே எழுதி வைத்திருக்கும் உயிர் ஓவியமாகவும் உள்ளது. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் அம்பிகைக்கு தனி சிறப்பு உண்டு. தேவனூர் ஸ்ரீ சோமநாதர் திருக்கோவில் , களக்காடு ஸ்ரீ சத்யவாகீஸ்வரர் திருக்கோவில், சிங்கிகுளம் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில், பத்தை ஸ்ரீ குலசேகரநாதர் திருக்கோவில் மற்றும் பத்மநேரி ஸ்ரீ நெல்லையப்பர் திருக்கோவில் ஆகிய ஐந்து ஆலயங்களும் ராமபிரனால் வழிபடப்பட்ட பஞ்சலிங்க திருத்தலங்களாக போற்றப்படுகின்றன.


களத்திர தோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் சோமநாதரையும் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் கோமதி அம்மனையும் வழிபடுகின்றனர். இந்த ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றால் இறைவனையும் அம்பாளையும் தரிசிக்க முடியும். சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது நம்பிக்கை.


திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் பிராஞ்சேரி உள்ளது. இங்கிருந்து களக்காடு பிரியும் சாலையில் 15 கிலோ மீட்டர் தூரம் சென்றால் தேவநல்லூரை அடையலாம்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News