Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாட்டின் உயரமான சில தெய்வ சிலைகள்!

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் கூட தெய்வங்களின் பிரமாண்டமான சிலைகளை காண முடியும். அதே போல தமிழ்நாட்டிலும் கூட உயரமான தெய்வச் சிலைகள் பல இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழ்நாட்டின் உயரமான சில தெய்வ சிலைகள்!

KarthigaBy : Karthiga

  |  31 Jan 2024 1:52 AM GMT

சேலத்தில் உள்ள 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை :

உலகில் மிக உயரமான முருகன் சிலையாக மலேசியாவில் உள்ள 10 மலை அடிவாரத்தில் உள்ள முருகன் சிலை கருதப்பட்டு வந்தது. இதன் உயரம் 142 அடி ஆகும். இந்த நிலையில் பத்துமலை முருகன் சிலையை செய்த அதே ஸ்தபதியைக் கொண்டு சேலத்தில் புத்திர கவுண்டம்பாளையம் என்ற இடத்தில் 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2015 - ஆம் ஆண்டு திட்டமிட்டு 2016 ஆம் ஆண்டு முதல் இதன் திருப்பணி தொடங்கியது.


முருகனின் ஆறுபடை வீடுகளில் இருந்து மணல் எடுத்துவரப்பட்டு இந்த முருகன் சிலை வடிக்கும் பணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜ ஸ்தபதியின் குழுவினர் தான் இந்த முருகன் சிலையையும் வடித்துள்ளனர். வசீகரிக்க முகம் அழகுடன் அமைந்த இந்த முருக பெருமான் வலது கையில் அபய ஹஸ்த முத்திரையை தாங்கி இடது கையில் வேல் பிடித்தபடி மணி மகுடம் சூடிய நிலையில் நின்ற திருக்கோளத்தில் அருள் பாலிக்கிறார். இந்த சிலையின் அருகிலேயே லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் சிலைக்கு மேலே சென்று முருகனின் கையில் உள்ள வேலுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.

வேலூரில் உள்ள 23 அடி உயர நடராஜர் சிலை:

வேலூரில் பொற்கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 23 அடி உயர நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடியில் 25 ஆண்டுகளாக சிற்பக் கலைக்கூடம் நடத்திவரும் வரதராஜ் ஸ்தபதி 10 ஆண்டுகளாக இந்த சிலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த சிலையானது 15 டன் எடையுடன் 23 அடி உயரம் 18 அடி அகலம் கொண்டதாக வடிக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் காணப்படும் இந்த நடராஜரை சுற்றிலும் உள்ள திருவாச்சி போன்ற அமைப்பில் 12 தாமரை மலர்கள், 52 சிங்கங்கள் , 34 பாம்புகளின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.


இந்த சிலையானது 15 ஆயிரம் கிலோ ஐம்பொன்னால் செய்யப்பட்டு இருக்கிறது.தற்போது இந்த நடராஜர் சிலை ஸ்ரீபுரம் தங்க கோவில் அருகே உள்ள திருமண மண்டப வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடராஜர் சிலையை நிறுவுவதற்காக தனி சன்னதி கட்டும் பணி தொடங்கப்பட்டிருப்பதாகவும் அந்த பணி நிறைவடைந்ததும் அந்த சன்னதியில் இந்த நடராஜர் சிலை நிறுவப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

42 அடி உயர பிரம்மாண்டமான வெக்காளியம்மன்:

மதுரை செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கிறது பிரசித்தி பெற்ற சிந்தலக்கரை திருத்தலம். எட்டயபுரத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த திருத்தலத்தில் சிலந்தக்கரை வெக்காளியம்மன் கோவில் இருக்கிறது. இது அம்மனின் புனிதத்துவம் பெற்ற சக்தி பீடமாக விளங்கி வருகிறது. இங்கே 42 அடி உயரத்தில் வெக்காளியம்மன் உருவச்சிலை அமைந்திருக்கிறது. 10 திருகரங்களுடனும் அதில் ஆயுதங்களை ஏந்தியபடியும் காட்சித் தரும் இந்த அம்மனை தரிசிப்பதற்காகவே இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.


தூத்துக்குடி மதுரை சாலையில் செல்பவர்கள் நிச்சயமாக இந்த வெக்காளியம்மனை தரிசிக்காமல் செல்ல மாட்டார்கள். சாலையில் செல்லும்போது இந்த உயரமான அம்மனை தரிசிக்க முடியும். இதே தலத்தில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட மகாவிஷ்ணுவின் பிரம்மாண்டமான தோற்றமும் உள்ளது. ஆதிசேஷன் மேல் சயனித்தபடியான மகாவிஷ்ணுவின் இந்த திருக்கோலம் 72 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

36 அடி உயர ஐயப்பன்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே பாவேந்தர் சாலையில் சுமார் 30 ஆண்டுகளாக ஐயப்பன் கோவில் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலயத்தில் தற்போது 36 அடி உயரத்தில் ஐயப்பன் சிலை பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை கருவறையில் ஐயப்பன் எப்படி குத்து காலிட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருவாறோ அதே போன்ற தோற்றத்தில் இந்த பிரம்மாண்டமான சிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News