விநோதமான புல்லட் பாபா கோவில், புல்லட்டை தெய்வமாக வணங்கும் அதிசயம் - ஆச்சர்ய காரணம்.!
விநோதமான புல்லட் பாபா கோவில், புல்லட்டை தெய்வமாக வணங்கும் அதிசயம் - ஆச்சர்ய காரணம்.!

ஶ்ரீ ஓம் பானா அல்லது புல்லட் பாபா கோவில் என்று இந்த இடம் அழைக்கபடுகிறது. இந்த விநோதமான கோவில் இந்தியாவின் ஜோத்பூரில் பாலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மூலவர் ஒரு இரு சக்கர வாகனம். இன்னும் துல்லியமாக குறிப்பிட்டு சொன்னால், 350 சிசி, ராயல் என்பீல்ட் புல்லட் வண்டி எண் RNJ 7773
1991 ஆம் ஆண்டில், டிசம்பர் 2 அன்று ஓம் சிங் ரத்தோர் என்கிற நபர் பாங்கடி என்கிற நகரத்திலிருந்து பாலி மாவட்டத்தின் சாண்டிரோ என்கிற பகுதிக்கு இந்த இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். தன்னுடைய வண்டியின் கட்டுபாட்டை அவர் இழந்த போது, மரத்தில் மோதி விபத்திற்கு ஆளாகியுள்ளார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வண்டி அவர் அருகே கிடந்துள்ளது. விபரமறிந்த போலீசார் அடுத்த நாள் காலை அந்த வண்டியை அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்த வண்டி காவல் நிலையத்திலிருந்து மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது.
காணாமல் போன அந்த வண்டி மீண்டும் சம்பவம் நடந்த இடத்திலேயே கிடந்துள்ளது. இதன் பின் மீண்டும் வண்டியை மீட்ட காவல் துறையினர் பாதுகாப்பிற்காக, வண்டியின் பெட்ரோலை முழுவதுமாக காலி செய்துள்ளனர். மேலும் அதன் சாவியை தங்கள் கட்டுபாட்டில் வைத்துள்ளனர். அனைத்து முயற்சியும் தோல்வியுறும் வகையில் மீண்டும் வண்டி சம்பவ இடத்திற்கே மர்மமான முறையில் சென்றுள்ளது. அந்த பகுதியில் நிலவும் நம்பிக்கையின் அடிப்படையில் போலீசார் பல முயற்சி செய்தும் அந்த வண்டி மீண்டும் சம்பவ இடத்திற்கே திரும்புவது ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
இந்த செய்தி அந்த பகுதியில் பெரும் பரபரப்புடன் பரவ, இந்த அற்புதத்தை மக்கள் வண்டிகளில் செல்லும் போது தங்கள் பாதுகாப்பினை வேண்டி இந்த இரு சக்கர வாகனத்தை வழிபட ஆரம்பித்துள்ளனர். இது நாளடைவில் இந்த இடத்தில் கோவில் கட்டும் அளவு புகழ் பெற்றுள்ளது. அந்த சம்பவ இடத்தில் உயிரிழந்த ஓம் சிங் ரத்தோர் என்பவரை அந்த ஊர் மொழியின் மரியாதையான வார்த்தையான பானா என அழைக்கின்றனர். பானா என்றால் ராஜ்புத் வம்ச இளைஞர் என்று பொருள்.
இங்கு வழிபடும் பக்தர்களின் பாதுகாப்பை ஓம் பாணா உறுதி செய்கிறார் என்பது இங்கு வழிபடும் மக்களின் நம்பிக்கை. இந்த பாதையை கடக்கிற பலரும் இந்த புல்லட் பாபாவை வணங்கி செல்கின்றனர். வழிபடும் பக்தர்கள் அந்த வாகனத்திற்கு திலகமிட்டு பூமாலை அணிவித்து வணங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் உள்ளூர் மக்கள் ஓம் பாணாவை புகழ்ந்து நாட்டுபுற பாடல்கள் பாடுவதும் வழக்கமாக உள்ளது.