Kathir News
Begin typing your search above and press return to search.

சுக வாழ்வு அருளும் சுகவனேஸ்வரர்!

ஈசனின் திருத்தலங்களில் ஒன்றான சுகவனேஸ்வரர் ஆலயத்தை பற்றி காண்போம்.

சுக வாழ்வு அருளும் சுகவனேஸ்வரர்!
X

KarthigaBy : Karthiga

  |  5 Jan 2024 11:45 AM IST

சேலம் மாவட்டத்தின் மையப்பகுதியில் திருமணிமுத்தாற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. கிளி கொஞ்சம் வனமாக முன்பு இருந்ததாலும் கிளி முகத்தை கொண்ட சுக முனிவர் தவம் இயற்றி வழிபட்டதாலும் இங்குள்ள இறைவன் சுகவனேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவனுக்கு வனநாதர், கிளி வண்ணம் உடையார் என்ற பெயர்களும் இறைவியான சொர்ணாம்பிகைக்கு மரகதவல்லி, பச்சை வள்ளி என்ற பெயர்களும் உண்டு.


கருவறையில் உள்ள மூலவரான சிவலிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். அதன் மேல் பகுதியில் வெட்டு தழும்பு போன்றும் காணப்படுகிறது. சுகவனேஸ்வரர் அருளாட்சி பிரியும் இந்த திருத்தலம் ஆதிசேஷன் வழிபட்ட தலமாகும். கிருதயுகத்தில் பாபநாசம் எனவும் திரேதாயுகத்தில் பட்டீஸ்வரம் எனவும் துவாபர யுகத்தில் நாகேஸ்வரம் எனவும் வழங்கப்பட்டது .கலியுகமான இப்போது சுகவனேஸ்வரர் என அழைக்கப்படுகிறது .


இந்த கோவில் 13 ஆம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியால் கட்டப்பட்டது . மேலும் சேர சோழ பாண்டிய மன்னர்களாலும் நாயக்க மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. அருணகிரிநாதராலும் அவ்வையாராலும் பாடல் பெற்ற இத்திருத்தலம் இது. கோவில் கிழக்கு முகமாகவும், வாசல் தெற்கு முகமாகவும் உள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது. கோபுரத்தை தாண்டியதும் முதல் சன்னதியாக சொர்ணாம்பிகை அம்மனின் சன்னதி தெற்கு நோக்கியபடி இருக்கிறது.


மகர மண்டபத்தில் உள்ள பெரிய நந்தியின் பின்புறம் கொடிமரம் உள்ளது. இது துவாரபாலகர்களை கடந்தால் உள்ளே ஆள் உயரத்தில் சதுர ஆவுடையாராக சுகவனேஸ்வரர் கம்பீரமாக காட்சி தருகிறார். தென்மேற்கில் இரட்டை விநாயகரும், வட மேற்கில் சுகவன சுப்பிரமணியரும் தனி சன்னதி கொண்டுள்ளனர். கோவிலில் உள்ள திருக்குளம் 'அமண்டுக தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது . இதில் தவளைகள் வசிப்பதில்லை என்பதால் இப்பெயர் பெற்றது.


இது தவிர பாபநாச தீர்த்தம் ,மனு சார்ந்த தீர்த்தம் ,மணிமுத்தாறு ஆகிய புனித தீர்த்தங்களும் உள்ளன. தல விருச்சமான பாதிரி மரம் நந்தவனத்தில் உள்ளது . இந்த கோவிலில் வைகாசி பெருவிழா பத்து நாட்கள் விமரிசையாக நடக்கும் .தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வது கண்கொள்ளா காட்சியாகும். மேலும் கார்த்திகை தீப திருவிழா, சித்திரை திருவிழா ஆகியன கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.


பல்லி விழுந்த உபாதைகள் நீங்கள் இத்தலத்தில் வழிபடுவது விசேஷம். இந்த கோவிலுக்கு பக்தி சிரத்தையுடன் வந்து சுகவனேஸ்வரரையும் சொர்ணாம்பிகையும் வழிபட்டால் சுகவாழ்வு கிடைக்கும். நிறைவாழ்வு வாழலாம் . திருமண பாக்கியம் , குழந்தை பாக்கியம், உத்தியோக பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நவகிரகங்களில் ராகு செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர். இந்த கிரகங்களை வழிபடுவதால் பெண்களுக்கு நல்ல வரணும் ஆண்களுக்கு உயர்ந்த உத்தியோகமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News