Kathir News
Begin typing your search above and press return to search.

புரட்டாசி விரதத்தின் சிறப்பும் மகிமையும்!

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வணங்குவதால் ஏற்படக்கூடிய சிறப்புகள் பற்றியும் மகிமை பற்றியும் காண்போம்.

புரட்டாசி விரதத்தின் சிறப்பும் மகிமையும்!

KarthigaBy : Karthiga

  |  19 Sep 2023 12:45 AM GMT

பொதுவாக சனிக் கிழமைகளில் பெருமாளை தரிசிப்பது விசேஷமானது. அதிலும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் எல்லா வித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவீர்கள் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. புரட்டாசி மாதம் ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரியதாக பார்க்கப்படுகின்றது. புதன் பகவான், அதி தேவதையாக மகா விஷ்ணு உள்ளார். அதனால் புரட்டாசி மாத விரதமும், வழிபாடும் மகாவிஷ்ணுவின் அருளை பெற்று தரும்.


புதனின் வீடு கன்னி ராசியாகவும், அது பெருமாளின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த புரட்டாசி மாதத்தில் தான் கன்னி ராசியில் சூரியன் அமர்கிறார். அதனால் இந்த மாதத்தில் பெருமாளுக்கு பூஜை, வழிபாடு, பஜனை, பிரம்மோற்சவம் செய்யப்படுகிறது. சனி பகவானும், புதனும் நட்பு கிரகங்கள் என்பதால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை மிக விஷேசமாகப் பார்க்கப்படுகின்றது. புரட்டாசி மாதம் எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் கூறுகிறது. இதனால் இந்த மாதத்தில் நாம் பெருமாளை வழிபாடு செய்வதால் எமபயம் நீங்கி, நல் வாழ்க்கையை பெறலாம்.


பெருமாளுக்கு உரிய திருத்தலங்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் மிகவும் உயர்வானதாக கருதப்படுகிறது. இங்கு பீமன் என்ற குயவன் வாழ்ந்து வந்தான். அவன் பெருமாளின் மிக தீவிர பகதன். அவன் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டார்.ஆனால் மிகவும் ஏழையான பீமன் விரதம் என்பதற்காக கோயிலுக்கு செல்லக் கூடிய சூழல் இல்லாமல், எப்போதும் பானை போன்ற மண்பாண்ட பொருட்களை செய்து வந்தான்.


அப்படியே கோயிலுக்கு சென்றாலும், பூஜை செய்ய தெரியாது. அப்படி ஒரு கோயிலுக்கு செல்லும் போது, சுவாமியைப் பார்த்து, ‘நீயே எல்லாம்’ என்ற வார்த்தையை மட்டும் சொல்லி விட்டு வந்துவிடுவார்.இந்நிலையில், கோயிலுக்கு போக நேரம் இல்லாததால், பெருமாளையே இங்கு அழைத்துவிட்டால் என்ன என எண்ணினார். அதனால், அவர் களிமண்ணால் ஒரு பெருமாள் சிலையை செய்தார். அதை பூஜிக்க பூக்கள் வாங்க கூட பணம் இல்லை. அதனால் தினமும் தன் வேலையில் மீதமாகும் சிறிதளவு களிமண்ணை வைத்து பூக்களை செய்து வந்தார். அப்படி செய்த பூக்களை கோர்த்து, மண் பூ மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவித்தார்.


அந்த நாட்டை ஆண்ட அரசன் தொண்டைமானும் பெருமாளின் தீவிர பக்தன். அவர் சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலையை அணிவிப்பார். அப்படி அவர் ஒருவாரத்தில் பெருமாளுக்கு தங்க பூ மாலை அணிவித்தார். மறு வாரத்தில் சென்று பார்க்கும் போது தங்க பூ மாலைக்கு பதிலாக களிமண்ணால் செய்யப்பட்ட மாலை பெருமாள் கழுத்தில் இருந்தது. இதைப் பார்த்ததும் அங்குள்ள கோயில் அர்ச்சகர்கள், பராமரிப்பாளர்கள் மேல் சந்தேகம் அடைந்து குழப்பத்தில் ஆழ்ந்தார்.

அவர் கனவில் தோன்றிய பெருமாள், குயவனின் பக்தியால், அவனின் களிமண் மாலையை தான் ஏற்றுக் கொண்டதாகவும், குயவனுக்குத் தேவையான உதவியை செய்யுமாறு அரசனிடம் கூறினார். திருமாலின் ஆணைப்படி குயவன் இருக்கும் இடத்திற்கு சென்ற அரசன், அந்த பக்தரை கௌரவித்தார்.பெருமாள் மீது குயவன் வைத்திருந்த பக்தியை கௌரவிக்கும் பொருட்டு, தற்போதும் கூட திருப்பதியில் மண் சட்டியில் தான் நைவேத்யம் செய்யப்படுகின்றது.


சனிக்கிழமையில் தான், சனி பகவான் அவதரித்து, புரட்டாசி மாதத்திற்கு சிறப்பை கொடுத்தார். இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.


SOURCE :samayam.com


Next Story
கதிர் தொகுப்பு
Trending News