Kathir News
Begin typing your search above and press return to search.

திருக்கார்த்திகை திருநாள் அன்று 'சொக்கப்பனை' கொளுத்துவதன் காரணம்

திருக்கார்த்திகை திருநாள் அன்று கோவில்களின் முன்னால் 'சொக்கப்பனை' கொளுத்தும் நிகழ்வு நடைபெறும். இதன் காரணம் என்ன என்பது பற்றி காண்போம்.

திருக்கார்த்திகை திருநாள் அன்று சொக்கப்பனை கொளுத்துவதன் காரணம்

KarthigaBy : Karthiga

  |  26 Nov 2023 2:06 PM GMT

திருக்கார்த்திகை திருநாளன்று 'சொக்கப்பனை ' கொளுத்தும் நிகழ்வு வருடா வருடம் நடைபெறும் .இந்நிகழ்வு கோயில்களின் முன் நடத்தப்படுகிறது. இந்நிகழ்வு பூச்சிகளைக் கவர்ந்திழுத்து அழிப்பதற்கு உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது. பனைமரத்தினை வெட்டிச் சிவாலயத்தின் முன்முற்றத்தில் நட்டு, அதில் சில அடி உயரத்திற்குப் பனையோலைகளைக் கூம்பு போன்று அமைக்கின்றார்கள். இவ்வமைப்பு 'சொக்கப்பனை' என்று அழைக்கப்படுகிறது.


ஆடிப் பட்டம் தேடி விதைக்கக் காரணம்; அதன் பின் வரும் காலங்களான ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்கள் பருவ மழைக்காலங்கள். இந்த மழைக்காலத்தில் பயிர்கள் சீராக வளரும். அதே காலகட்டதில் இந்தப்பயிர்களின் எதிரிகளான; கூட்டுப்புழுக்களிலிருந்து தாய் "அந்து' பூச்சிகள் மிக அதிகளவில் வெளிவரும். இந்த பூச்சிகள் இடும் முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்களும், பூச்சிகளும் இந்த பருவத்தில் தளதளவென வளர்ந்துள்ள பயிர்களை தாக்கி அழிக்கும்.


இந்த பூச்சிகள் உருவாகக் காரணமான தாய் பூச்சிகளை, விளக்கு வெளிச்சத்தால் கவர்ந்து அழித்தால் நம் பயிர்களை கொஞ்சமாவது காப்பாற்ற முடியும். இந்த வித்தையை தெரிந்து கொண்ட நம் முன்னோர்கள், கார்த்திகை மாதம் முழுவதும் சந்தியா காலமான மாலை நேரத்தில் விட்டில் பூச்சிகளை கவர்ந்து கொல்வதற்காக வாசலில் விளக்கு ஏற்றும் பழக்கத்தை ஏற்படுத்தினர்.


தென்னை, பனை மரப்பொருட்கள் அனைத்திலும் பெரிய மருத்துவ குணம் உள்ளது. பலவகையான பொருட்களை தந்து பிறருக்கு உபயோகமாக இருப்பதால் பனைமரத்தை "பூலோக கற்பக விருட்சம்' என்பர். சில கோயில்களில் பனைமரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பனை ஓலையை எரிப்பதால் ஏற்படும் புகையில் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, விஷப்பூச்சிகளை கொல்லும் ஒருவித நச்சுத்தன்மை இருந்ததால் ஆறு மற்றும் குளக்கரையில் தானே முளைத்து வளர்ந்துள்ள பனை மரத்திலிருந்து பச்சை மட்டையை வெட்டி எடுத்து வந்து நம் சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஊரின் மையத்திலுள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயிலின் முற்றத்தில் ஒவ்வொன்றாய் அடுக்கி அதனை கோபுரம் போல் வடிவமைத்து திருக்கார்த்திகை அன்று மாலை நேரத்தில் "சொக்கப்பனை' கொளுத்துவார்கள். பேச்சுவழக்கில் இதனை சொக்கப்பானை என்று கூறுவார்கள்.

இந்த திருவிழா மூன்று நாள்கள் தொடர்ந்து ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும். இது தெய்வீகமாக பார்க்கப்பட்டு அக்னிமய லிங்கமாக அந்த அண்ணாமலையாராகவே பக்தர்களால் வணங்கப்படுகிறது. பின் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலை பயிர்களின் மேலே தூவுவார்கள். இதனால் சேதத்தை ஏற்படுத்தும் அனைத்து வகை பூச்சிகளும் இறந்துவிடும். பயிர்கள் காக்கப்படும். தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் பனை ஓலையைக் கொண்டு பொது வெளியில் அனைவரும் பார்க்கும் வண்ணம் சொக்கப்பனை கொளுத்துவார்கள். அநேகமாக எல்லாக்கோயில்களிலும் உற்சவ மூர்த்தியை எழுந்தருளச் செய்து அவர் முன்னிலையில் இவ்வைபவம் நடைபெறும்.


வெளியிலுள்ள அச்சமூட்டும் விஷப்பூச்சிகள் அழிவதுடன் நம் மனதை ஒருநிலைப்படுத்தி வணங்குவதால் நம் ஆழ் மனதின் உள்ளே ஒளிந்து கொண்டுள்ள பொறாமை, வஞ்சம், சூது, பிறர் பொருள்மீதான பேராசை போன்ற அழுக்குகள் அழித்தொழிக்கப்படும். பேச்சுவழக்கில் "ஒரு கல்யாணம், கார்த்திகை என வீட்டில் நடக்கவில்லையே" என நாம் ஆதங்கப்படுவோம். அந்த குறைகள் நீங்குவதற்கு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை அனைவரும் கொண்டாடுவோம்!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News