திருவாதிரை நோன்பு ஆருத்ரா தரிசனமும் - உருவான கதை
திருவாதிரை நோன்பு தோன்றிய கதையும் ஆருத்ரா தரிசனமும் எவ்வாறு உருவானது என்பது பற்றி காண்போம்.
By : Karthiga
ஒருமுறை பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மகாவிஷ்ணு திடீரென்று ஆகா அற்புதம் என்று சத்தம் போட்டு கூறினார். அவர் அப்படி பரவசமடைந்ததற்கான காரணம் என்ன என்று மகாவிஷ்ணுவின் பாதத்தில் அமர்ந்த மகாலட்சுமிக்கும் மகாவிஷ்ணுவை தாங்கியபடி இருந்த ஆதிசேஷனுக்கும் புரியவில்லை. அவர்கள் இருவரும் திருமாலின் பரவச நிலைக்கு என்ன காரணம் என்பது பற்றி அவரிடமே கேட்டனர். அதற்கு மகா விஷ்ணு திருவாதிரை நாளான இன்று சிவபெருமான் ஆடிய ஆனந்த தாண்டவத்தை ஞான கண்ணால் பார்த்தேன். அதுதான் என் பரவசத்திற்கு காரணம் என்றார் . ஈசனின் ஆனந்த தாண்டவம் பற்றி திருமால் சொல்ல சொல்ல ஆதிசேஷனின் உடல் சிலித்தது. அவருக்கும் சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண வேண்டும் என்ற ஆவல் உருவானது. ஆதிசேசனின் மனஓட்டத்தை புரிந்து கொண்ட மகாவிஷ்ணு ஆதிசேஷன் உன் மனம் நினைப்பதை நான் அறிவேன். பூலோகத்தில் பிறந்து ஈசனை நினைத்து தவம் இருந்தால் உனக்கு அந்த ஆனந்த தாண்டவ தரிசனம் கிடைக்கும் போய் வா என்று அருளினார்.
அதன்படியே ஆதிசேஷன் பூமியில் பதஞ்சலி முனிவராக பிறந்தார். இடுப்பு வரை மனித உடலும் இடுப்புக்கு கீழே பாம்பு தோற்றமும் கொண்டவராக அவரது உருவம் இருந்தது. பலகாலம் பூமியில் தவம் இருந்ததன் பலனாக பதஞ்சலி முனிவருக்கு சிதம்பர ஆலயத்தில் இறைவனின் ஆனந்த தாண்டவத்தை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. அவருக்கு சிவபெருமான் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளினார்.அப்போது பதஞ்சலி முனிவர் இறைவா இத்திருக்காச்சியை பூலக மக்களுக்கு காட்டி அவர்கள் முக்தியடைய வழி காட்ட வேண்டும் என்று வேண்டினார். அதன்படியே ஆண்டுதோறும் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்று வருகிறது.