எங்குமில்லா சிறப்பாய் விநாயகருக்கு பள்ளியறை இருக்கும் அதிசய திருக்கோவில்!
எங்குமில்லா சிறப்பாய் விநாயகருக்கு பள்ளியறை இருக்கும் அதிசய திருக்கோவில்!
By : Thoorigai Kanaga
புதுச்சேரியில் அமைந்துள்ளது மணக்குள விநாயகர் திருக்கோவில். மிகவும் பிரபலமான ஆன்மீக மற்றும் சுற்றுலா தலம். ஒரு வித பிரஞ்ச் சாயலுடன் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோவில் இது. வங்காள விரிகுடா கடலுக்கு 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். தென் சென்னையிலிருந்து 165 கி.மீ தொலைவில் இந்த கோவிலை அடையலாம். இந்த கோவிலின் மூலவர் பிள்ளையார் ஆவார். கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.
கடற்கரை சாலைக்கு அருகில் இருப்பதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடமாக இக்கோவில் உள்ளது. 2015 ஆம் ஆண்டில் புணரமைக்கபட்ட கோவில் இது. 500 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோவில் இங்கே அமைதுள்ளது. இந்த கோவிலுக்கான பெயர் காரணம் மணல் மற்றும் குளம் மணல் நிறைந்த குளத்தருகே அமைந்த விநாயகர் என்பதே காலப்போக்கில் மருவி மணக்குள விநாயகராக ஆனதாக நம்பிக்கை நிலவுகிறது.
இங்கு நடைபெறும் விழாக்களில் முக்கியமானது பிரம்மோட்ஷவம். 24 நாட்கள் பெரும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இந்த கோவிலின் அதிசயம் யாதெனில், பிள்ளையார் கோவில்களில் வேறெங்குமே இல்லாத வண்ணம் இங்கு மட்டும் பள்ளியறை உண்டு. இங்கே அவருடன் தாயார் உள்ளார். இவர் பள்ளி யறை நீங்குவதை உணர்த்தும் வகையில் உற்சவ மூர்த்தியாக செல்வது பாதம் மட்டுமே. மூலவரான விநாயகர் திருவுருவம் அமைந்திருக்கும் பீடம் அமைந்திருப்பதே ஒரு கிணறு அல்லது குளத்தின் மீது தான் என்பது நம்பிக்கை. இந்த பீடத்திற்கு அருகில் ஒரு சிறு குழி உண்டு. இந்த குழி முழுவதும் நீர் மட்டுமே நிரம்பியிருக்கிறது. அந்த குழியின் ஆழத்தை ஒருபொதும் கணக்கிட முடிந்ததில்லை.
இங்கிருக்கும் மற்றொரு அதிசயம் தங்க தேர். இது முழுக்க முழுக்க பக்தர்களின் நன்கொடையால் உருவானது. இந்த தேருக்காக பயன்படுத்தப்பட்ட தங்கம் 7.5 கிலோ வாகும். 10 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்டது இந்த தேர். மேலும் இந்த இடத்தில் தான் 300 ஆண்டுகளுக்கு முன்பு தொள்ளை காது சித்தர் முக்தி அடைந்து சமாதியானார் என்பது வரலாறு. பிறந்த குழந்தைகளை முதன் முறையாக இந்த கோவிலுக்கு அழைத்து வரும் பழக்கம் இதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக உண்டு.