Kathir News
Begin typing your search above and press return to search.

திருக்குறுக்கை சிவன் ஆலயம் - புராண வரலாறு

சிவன் காமனை தகனம் செய்த திருக்குறுக்கை சிவன் ஆலயம் பற்றி காண்போம்.

திருக்குறுக்கை சிவன் ஆலயம் - புராண வரலாறு

KarthigaBy : Karthiga

  |  2 Sep 2023 7:00 AM GMT

தீர்க்கவாகு என்ற முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்கு சென்று இறைவனுக்கு கங்கை நீரை ஆகாயத்தின் வழியே பெற்ற அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆலயத்தின் முன்னே நின்று நீண்ட தன் இரு கரங்களை உயரேத் தூக்குவார் . குடத்தில் கங்கை நீர் வரும் அதை கொண்டு அபிஷேகம் செய்வார். அதன் அடிப்படையில் இவ்வாறு ஆலயத்தின் முன்புறமுள்ள திரிசூல தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டார்.


திரிசூல தீர்த்தமானது புனிதமானது என்பதை அறியாது வழக்கம் போல கங்கை நீரால் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய முடிவு செய்து தன் இரு கரங்களையும் ஆகாயத்தை நோக்கி தூக்கினார் .அவரது நீண்ட கைகள் குறுகிப் போயின. இதை எதிர்பாராத முனிவர் இறைவனை சரணடைந்தார். முதலில் விநாயகரை வழிபட விநாயகரும் தன் கையை குறுக்கிக்கொண்டு காட்சி அருளினார்.முனிவரின் கவலையை போக்கினார். இதனால் இத்தளத்தின் பெயர் குறுங்கைத்தலம் என்று ஆனது.


குறுங்கை விநாயகர் ஆலய பிரகாரத்தில் தனி சன்னதியில் ஆவுடையார் மீது இருப்பதும் அவருக்கு அருகில் குறுங்கை முனிவரின் உருவம் இருப்பதும் இந்த ஆலயத்தின் சிறப்பாகும். பிரம்மனின் பேத்தியும் தட்சனின் மகளும் ஆன தாட்சாயிணியை சிவபெருமான் மணந்தார். அது பிடிக்காத தட்சன் சிவபெருமானை அழைக்காமல் யாகம் நடத்தினான்.


இதனால் கோபம் அடைந்த தாட்சாயிணி தட்சனின் வேள்வி தீயில் விழுந்து உயிர் துறந்ததுடன் வேள்விக்கான பலன் கிடைக்காத படி செய்தாள். தாட்சாயணியின் முடிவு கேட்டு கோபம் கொண்ட சிவபெருமான் வீரபத்திரனை அனுப்பி தட்சனின் வேள்விச்சாலையையும் ,தட்சனையும் அழித்தார் . பின்னர் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார் ஈசன் .இந்த நிலையில் சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற சூரபத்மன் மற்றும் தாரகாசுரன் ஆகியோர் தேவர்களை துன்புறுத்தி வந்தனர் .


அசுரர்களால் பாதிக்கப்பட்ட தேவர்கள் அவர்களை அழிக்க ஒரு குமாரனை தோன்ற செய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டுகோள் வைப்பதென முடிவு செய்தனர் .ஆனால் அவர் யோக நிலையில் இருந்ததால் பல முயற்சிகளை செய்தும் தவத்தை கலைக்க இயலவில்லை. இறுதியாக காம கடவுளான மன்மதன் மூலம் சிவன் மீது அம்பு விட செய்து அவரது தவத்தை கலைத்தனர் . இதனால் கோபமுற்ற சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து காமனை பார்க்க அவன் எரிந்து சாம்பல் ஆனான். இதுவே காமதகனம் எனப்படுகிறது.


மன்மதனின் மனைவியான ரதிதேவி தன் கணவனை உயிர்ப்பித்து தரும்படி சிவபெருமானிடம் வேண்டினாள். சிவபெருமான் அவளிடம் "நான் பூலோகத்தில் பார்வதியை மனம் புரியும்போது மன்மதனுக்கு சாப விமோசனம் கிடைக்கும் அதுவரை அவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான்" என்று அருளினார். காமன் தகனத்தின் போது சிவனின் கண்களில் இருந்து வெளிப்பட்ட தீப்பொறியை வாயு பகவான் சுமந்து சென்று சரவணன் பொய்கையில் ஆறு பகுதிகளில் விழ செய்தார். இது ஆறு குழந்தைகளாக உருப்பெற கார்த்திகை பெண்கள் அறுபவர் அந்த குழந்தைகளை வளர்த்தனர்.


பார்வதி தேவி ஆறு குழந்தைகளையும் தனது இரு கரத்தால் ஒன்றாக அணைக்க அந்த ஆறு பேரும் ஒருவராக மாறினார். இப்படி காமனை தகனம் செய்து ஆறுமுகனை உருவாக்கி அசுரனை அழிக்க சிவன் அருள் புரிந்த திருத்தலமே திருக்குறுக்கை திருத்தலம் ஆகும். இவ்வாலயம் அமைந்துள்ள சிறு குறுக்கை செல்வதற்கு மயிலாடுதுறையிலிருந்து நேரடி பேருந்து மற்றும் ஆட்டோ வசதி இருக்கிறது. மணல்மேடு மற்றும் குத்தாலத்தில் இருந்தும் ஆட்டோ வசதி உள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News