Kathir News
Begin typing your search above and press return to search.

திரியம்பகேஸ்வரர் ஆலயம் - அப்படி என்ன அதிசயம் இந்த கோவிலில்?

ஆலயங்கள் அனைத்துமே அதிசயங்கள் நிறைந்ததாக இருப்பது வியப்புக்குரியது. நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆலயத்தை பற்றியும் படிக்கும் போதும் கேட்கும் போதும் கண்களால் காணும் போதும் ஒரு விஷயத்தால் நாம் ஈர்க்கப்படுவோம்.

திரியம்பகேஸ்வரர் ஆலயம் -  அப்படி என்ன அதிசயம் இந்த கோவிலில்?
X

KarthigaBy : Karthiga

  |  15 Jun 2023 3:00 PM GMT

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திரியம்பக் என்ற இடம். இங்குதான் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான திரியம்பகேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. பிரம்மகிரி, நீலகிரி, கலகிரி ஆகிய மூன்று மலைகளுக்கு நடுவில் பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள இக்கோவில் கருங்கற்களினால் கட்டப்பட்டது.


இந்த ஆலயத்தில் வில்வ தீர்த்தம், விஷ்வநத் தீர்த்தம், முகுந்த தீர்த்தம் ஆகிய மூன்று நீர்நிலைகள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 அடி உயரத்தில் மலையின் மீதுள்ள இந்த ஆலயத்தினை சூழ்ந்த பகுதிகள் மிகவும் ரம்யமான ஆன்மீக வாழ்வுக்கான அமைதியான சூழலாக இருப்பதால் பல சித்தர்களும் ரிஷிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிற இடமாக இதனை போற்றுகின்றனர்.


பல்லாயிரம் ஆண்டுகளாக அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய நீரூற்று ஒன்று உள்ளது. கோவிலின் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கத்தில் எப்போதும் நீர் ஊற்றிக் கொண்டே இருப்பது அதிசயமான நிகழ்வாகும். பிற ஜோதிர் லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. ஆனால் இந்த தளத்தில் உள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய கடவுளின் முகங்கள் போன்ற அமைப்புடன் உள்ளது தனித்துவமான அம்சமாகும் .


இந்த பகுதியில் வாழ்ந்த கௌதம ரிஷி என்னும் முனிவர் தன் மனைவியோடு இருந்த கடுமையான தவத்தின் பயனாக இங்கு சிவன் தன் ஜடாமுடியில் இருந்த கங்கையின் சில துளியை விழச் செய்ததாகவும் அதுவே இங்கு எப்போதும் நீரூற்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதோடு சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மூவரும் சுயம்பு வடிவில் இங்கு தங்கியதாகவும் கூறப்படுகிறது. கர்ப்ப கிரகம் தாழ்வாக உள்ளது .


மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப் பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது. உரல் போன்று நடுவே பள்ளமாக உள்ளது.இந்த பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுக்களின் அடையாளம் உள்ளது இத்தல இறைவனை வணங்கினால் வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும் என்பது ஐதீகம்.


12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு பகவான் சிம்ம ராசியில் வரும்போது இத்தளத்தில் கும்பமேளா பெருவிழா கொண்டாடப்படுகின்றது . கோவிலீல் நடக்கும் அதிசயத்திற்கு ஆன்மீக ரீதியாக பல காரணங்கள் கூறப்பட்டாலும் இங்கு நடக்கும் அதிசயத்திற்கான காரணங்கள் இதுவரை அறிவியல் ரீதியாக புலப்படவில்லை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News