முற்பிறவி பாவங்களை போக்கும் திருபுவனம் ரங்கநாதர் கோவில்
முற்பிறவி பாவங்களைப் போக்கும் திருபுவனம் ரங்கநாதர் கோவிலில் சயனகோலத்தில் பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.
By : Karthiga
ரங்கநாதர் என்றால் நம் நினைவுக்கு திருச்சி அருகே உள்ள ஸ்ரீரங்கம் தான் நினைவுக்கு வரும். வைணவ திருத்தலங்களில் முக்கிய இடம் வகிக்கும் ஸ்ரீரங்கத்தை போல தஞ்சை மாவட்டத்தில் சின்ன ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் ஒரு கோவில் உள்ளது. தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா சாலியமங்கலம் அருகே திருபுவனம் என்ற ஊரில் சின்ன ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் ரங்கநாதர் கோவில் உள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் புத்தூர், நாச்சியார் விண்ணகரம், திருபுவன வீரபுரம், விக்கிரமசோழ விண்ணகரம் என்று வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகும் . மேலும் சோழப் பேரரசன் ராஜராஜன் தனது சகோதரிக்கு வழங்கிய 7 நாடுகளில் நடுநாயகமாக இருந்த ஊர் திருபுவனம். சோழர் காலத்தில் 400 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஏரி வெட்டப்பட்டு இந்த ஆலயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. 13 ஆம் நூற்றாண்டில் பிற்பகுதியில் இவ்வூர் பாண்டிய மன்னர்களின் வசமானது. 1350 ஆம் ஆண்டு இந்த கோவிலில் கருங்கல்லால் திருப்பணிகள் செய்யப்படுவதாக கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிறகு இந்த கோவில் படையெடுப்புகளால் சிதைவுக்கு உள்ளானது. கடந்த 2013 ஆம் ஆண்டு அரசின் ஒப்புதலோடு இந்த கோவில் திருப்பணி தொடங்கப்பட்டது. அப்போது அடித்தளம் தோன்றியபோது பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் மூலவர் சிலை மற்றும் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
சிலைகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. மற்ற விக்ரகங்கள் அனைத்தும் தற்போது ஒரு தகர கொட்டகை அமைக்கப்பட்டு அதில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றுவரை மக்கள் வழிபட்டு வருகிறார்கள். தூணில் இருந்தாலும் துரும்பில் இருந்தாலும் பக்தர்களுக்கு அருள் வழங்கும் ரங்கநாத பெருமாள் திருபுவனத்தில் அமர்ந்து எட்டு திசையிலும் இருந்து தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.
மேலும் திருமணத்தடை நீங்கவும் மனக்கசப்பினால் பிரிந்த தம்பதியர் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்பதும் இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை ஆகும். முந்தைய பிறவியில் தாங்களோ அல்லது தங்கள் மூதாதையரோ செய்த பாவத்தால் துன்பப்படும் பக்தர்கள் திருபுவனம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்த முறையாக வழிபட்டால் முற்பிறவியல் செய்த பாவங்கள் நீங்கி நிம்மதியான வாழ்வை பெறலாம் என்று கூறப்படுகிறது.