வாஸ்து பரிகார தலமாக விளங்கும் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில்!
நாற்பரமும் அகலை சூழல் அமைந்திருக்கும் இந்த கோவிலில் அருளும் இறைவன் அக்னேஸ்வரர் இறைவி கருந்தார் குழலி சூலிகாம்பாள் என்ற பெயரும் இறைவிக்கு உண்டு.
By : Karthiga
தேவாரப் பாடல் ஆசிரியர்களில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர். சிவபெருமானுக்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருநாளில் பெருவிழா நடத்துவது சுந்தரரின் வழக்கம். அந்த விழாவில் மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்களுக்கு ஆடை அணிவித்து அமுதூட்டி வணங்குவார். இந்த புனித சேவையில் சுந்தரரின் மனைவி பறவை நாச்சியார் அம்மாள் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொள்வார்.
இவ்வாறு இவர்கள் வழக்கம் போல நடத்தும் இந்த விழாவில் ஒரு சமயம் சுந்தரருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. என்ன செய்வது யாரிடம் கேட்பது என தெரியாமல் தவித்தபடியே பயணித்தார் சுந்தரர். பல கோவில்களுக்கு சென்று இறுதியில் திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார். அங்கே கோவிலில் திருப்பணி நடந்து கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் செங்கற்களும் மணலும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. நீண்ட தூரம் பயணம் செய்த காரணத்தால் அவருக்கு களைப்பு ஏற்பட்டது. இதை எடுத்து அவர் திருப்புகலூரில் சற்று ஓய்வு எடுத்தார்.
மணலை படுக்கையாக்கினார். செங்கற்களை தலையணையாக்கி துயில் கொண்டார். அவர் தூங்கினாலும் கூட அவரது சிந்தனையோ மகேஸ்வர பூஜையை எப்படி நடத்துவது என்பதிலேயே இருந்தது. அப்போது அவரது கனவில் "பங்குனி உத்திரத்துக்கு காசு எங்கே?" என்று மனைவி கேள்வி கேட்பது போல் இருந்தது. உடனே அவர் கண்விழித்து பார்த்தபோது அவர் தலையணைக்கு பயன்படுத்திய செங்கற்கள் தங்க கட்டிகளாக மாறி இருந்ததை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். என்ன இறைவனின் மகிமை என ஆனந்தப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு பின் இத்தலம் வாஸ்து பரிகாரத்தலமாக விளங்கத் தொடங்கியது. இன்றும் புதிதாக வீடு கட்டுபவர்கள் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு வந்து அக்னீஸ்வரர் சன்னதிக்கு நேர் எதிரில் மூன்று செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு எடுத்து செல்கின்றனர். இவ்வாறு பூஜை செய்து மூன்று செங்கற்களை வடகிழக்கு தென்கிழக்கு பகுதிகளிலும் பூஜை அறையிலும் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வீடு கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி நாம் விரும்பியபடி விரைவில் வீட்டை கட்டி முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை .இந்த வாஸ்து பூஜை இத்தலதின் அனைத்து நாட்களிலும் செய்யப்படுகிறது.
வேளாக்குறிச்சி ஆதீனம் சத்யஞான மகா தேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் உள்ளது. ஒரு சமயம் அக்னி தேவனுக்கும் வாயு தேவனுக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. அக்னிதேவன் நானே பெரியவன் என்னை எதிர்த்தால் யாராக இருந்தாலும் பொசுக்கி சாம்பலாக்கி விடுவேன் . நான் தாக்க தொடங்கினால் மலையானாலும் வெடித்து சிதறும் என்று தற்பெருமை கொண்டார். இதைக்கேட்ட வாயு தேவன் அக்னியிடம் எவ்வளவு சக்தி படைத்தவனாக இருந்தாலும் நீ என் மகன் தான் பஞ்சபூதங்களின் தோற்றத்தில் என்னிடம் இருந்தே நீ தோன்றினாய். எனவே நீ எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் என் ஆற்றலே உன்னிடம் உள்ளது. இதனால் நீ என் ஆற்றலுக்கு முன்னே நிற்காது ஒழிவாயாக என சாபமிட்டார்.
தன்னுடைய தந்தையின் சாபத்தை நீக்க என்ன வழி என தன் குல குருவாகிய பிரகஸ்பதியிடம் கேட்டார் அக்னி. தந்தையின் சாபம் பொல்லாதது. இதனால் நீ சோழ நாட்டில் புன்னாகவனம் என்ற ஒரு தலம் இருக்கிறது .அங்கே சென்று நாற்புறமும் அகழி தோண்டி அங்கிருந்து சிவ நாமம் சொல்லி சிவ பூஜை செய்து வா. அவ்வாறு செய்தால் எந்த சாபமும் உன்னை அண்டாது . உனக்குள்ள இகழ்ச்சிகள் அனைத்தும் நீங்கும் என்று கூறினார். அக்னி பகவானும் அவ்வாறே சென்று புன்னாக வனத்தில் நடுவில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். இவருடைய பூஜைக்கு மனம் இறங்கிய சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அக்னி தேவனுக்கு காட்சியடுத்தார்.
உடனே அக்னி தேவன் சிவபெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கி, பெருமானே நான் எதை தீண்டினாலும் எதை உண்டாலும் என்னுடைய புனிதத் தன்மை கெடாமல் இருக்க வேண்டும் நீங்கள் இத்தலத்திலும் வீற்றிருந்து உலக மக்களுக்கு அருள் வழங்க வேண்டும் என்று வேண்டினார். அதன்படியே அக்னிக்கு அருள்புரிந்ததால் இத்தல இறைவன் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் . இந்த கோவிலின் தல விருட்சம் புன்னை மரம். இந்த கோவிலை சுற்றி அமைந்துள்ள அகழி 'பாண தீர்த்தம் ' என்றும் 'அக்னி தீர்த்தம்' என்றும் அழைக்கப்படுகிறது.