Kathir News
Begin typing your search above and press return to search.

கணவன் மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் திருவண்ணாமலையில் நடந்தேறும் திருவூடல் திருவிழா

சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றாக அரங்கேறிய சிவ பார்வதியின் ஊடல் நிகழ்வை பற்றி காண்போம்

கணவன் மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் திருவண்ணாமலையில் நடந்தேறும் திருவூடல் திருவிழா

KarthigaBy : Karthiga

  |  10 Jan 2023 3:45 PM GMT

சிவபெருமானின் தீவிர பக்தராக திகழ்ந்தவர் பிருங்கி முனிவர் ஈசனை தவிர யாரையும் வணங்க மாட்டார். ஒரு முறை கைலாயத்தில் வசிக்கும் சிவபெருமானை வழிபடுவதற்காக பிருங்கி முனிவர் சென்றிருந்தார். அங்கு ஈசனின் அருகில் பார்வதி அமர்ந்திருந்தார். இதைக்கண்ட பிருங்கி முனிவர் 'சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபாடு செய்வது எப்படி?' என்று சிந்தித்தார். பின்னர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் இடையில் புகுந்து ஈசனை மட்டும் மூன்று முறை வலம் வந்து வழிபட்டார். இதனை அறிந்து கொண்ட பார்வதி தேவி "பிருங்கி முனிவரே என்னை வழிபடுவதை தவிர்க்கும் உமக்கு உடல் இயக்கத்திற்கு ஆதாரமாக விளங்கும் என்னுடைய சக்தி மட்டும் எதற்காக? அதை இப்போதே என்னிடம் திருப்பி கொடுத்துவிடு" என்றார்.


அதைப்பற்றி எல்லாம் பிருங்கிமுனிவர் கவலைப்படவில்லை. தன் உடலில் உள்ள சக்தியை கொடுத்துவிட்டார். இதனால் அவரது உடல் தள்ளாடியது. கீழே விழப் போன பிருங்கி முனிவரை ஈசன் தாங்கிப்பிடித்தார். பின்னர் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு பிருங்கி முனிவர், "இறைவா எனக்கு மாற்றத்தை வழங்குங்கள்" என்று வேண்டினார். அந்த வரத்தை கொடுக்க ஈசன் தயாரான போது பார்வதி தேவி அதனை தடுத்தார். ஆனால் தன் பக்தனுக்கு அவன் கேட்ட வரத்தை அளிப்பதில் சிவபெருமான் உறுதியாக இருந்தார். இதனால் சிவபெருமான் மீது பார்வதிக்கு ஊடல் ஏற்பட்டது. சிவபெருமானை பிரிந்து ஆலயத்துக்கு வந்த பார்வதி தேவி கதவை பூட்டி கொண்டார். பக்தனா? மனைவியா என்று தவித்த சிவபெருமான் முதலில் பக்தனுக்கு வேண்டிய வரத்தை அளித்துவிட்டு பின்னர் மனைவியை சமாதானப்படுத்த நினைத்தார். அதன்படி இரவு ஓரிடத்தில் தனியாக தங்கிய சிவபெருமான் மறுநாள் காலையில் பக்தனான பிருங்கி முனிவர் கேட்ட வரத்தை கொடுத்துவிட்டு மாலையில் மனைவியிடம் வந்து அவரது உடலை போக்கினார். இந்த நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை தளத்தில் பொங்கலுக்கு மறுநாள் நடக்கிறது.


இந்த ஆண்டு நிகழ்வு வருகிற 16-ம் தேதி நடைபெறுகிறது. மாட்டுப்பொங்கல் தினமான அன்று காலை மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். பின்னர் இறைவனும் இறைவியும் மாடவீதிகளை மூன்று முறை வலம் வருவார்கள். அன்று மாலை திருவூடல் தெருவில் சிவனும் பார்வதியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்படும் ஊடல் அதிகமானதும் அம்பாள் கோவிலுக்கு சென்று விடுவார், அவரது சன்னதி கதவுகள் மூடப்படும். இதை அடுத்து அம்மனை ஈசன் சமாதானம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அவர் சமாதானம் ஆகாததால் அண்ணாமலையார் அன்று இரவு அருகில் உள்ள குமரன் கோவிலில் சென்று தங்குவார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அடுத்த நாள் காலையில் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது. ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே அண்ணாமலையார் தன்னைத்தானே சுற்றிக்கொள்ளும் வகையில் கிரிவலம் நடைபெறும். அதில் ஒன்று இந்த திருநாள். கிரிவலம் முடிந்ததும் மாலையில் அண்ணாமலையார் ஆலயம் திரும்புவார். அங்கு உண்ணாமலை அம்மனை சமரசம் செய்து ஊடலை தீர்ப்பார்.


இறுதியில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனும் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். இப்படி காட்சி தருவதை மறுஊடல் என்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த நிகழ்வு வேறு எந்த சிவாலயத்திலும் இவ்வளவு வெகு விமரிசையாக நடைபெறுவதில்லை. திருவண்ணாமலையில் நடைபெறும் 'திருவூடல்' முதல் மறுநாள் நடைபெறும் 'மறுஊடல்' வரை காணும் தம்பதியர்களின் வாழ்வில் பிரச்சனைகள் வராது. குடும்ப ஒற்றுமை வளரும் என்பது ஐதீகம். இதனால் தான் திருவூடல் கண்டால் 'மறுஊடல்' இல்லை என்ற சொல் வழக்கில் வந்தது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News