உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில்
தஞ்சாவூர் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் தஞ்சாவூரில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.
By : Karthiga
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இந்த அம்மன் கோயிலும் ஒன்று . இக்கோயில் தஞ்சாவூர் கிழக்கு வாசல் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வெள்ளை விநாயகர் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது. இக்கோயிலின் மூலவராக உஜ்ஜயினி மாகாளியம்மன் அமர்ந்த கோலத்தில், கிழக்கு பார்த்த நிலையில் உள்ளார்.
மூலவர் சன்னதிக்கு எதிரில் சூலம், பலி பீடம், கொடி மரம், சிங்கம் ஆகியவை காணப்படுகின்றன. திருச்சுற்றில் ஏனாதிநாய நாயனார், சிவதுர்க்கை, கல்யாண கணபதி, அய்யப்பன், அனுமன் ஆகியோர் உள்ளனர். வேப்ப மரத்தின் அருகே நாக சிற்பங்கள் உள்ளன. அடுத்து நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. மூலவர் சன்னதிக்கு முன்பாக வலப்புறம் செல்வ விநாயகரும், இடப்புறம் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும் உள்ளனர்.
இக்கோயில் நுழைவாயில், முன் மண்டபம், திருச்சுற்று, கருவறை, மூலவர் விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. 29 ஆகஸ்டு1988 திங்கட்கிழமை அன்று இக்கோயிலுக்கான கால்கோள் விழா வாளமர் கோட்டை காத்தையா சுவாமிகளால் நடத்தப்பட்டதற்கான கல்வெட்டு உள்ளது.
வெளியூரில் இருந்து ஒரு குடும்பத்தார் வணிகம் செய்வதற்காக தஞ்சாவூர் வந்தபோது அவர்களுடன் 10 வயது மதிக்கத்தக்க சிறுமியும், அவளது அண்ணனும் உடன் வந்தனர். தற்போது கோவில் அமைந்திருக்கும் இடத்தின் அருகே ஒரு குடிசையில் அந்த குடும்பத்தார் தங்கி இருந்தனர். அனைவரும் வெளியில் சென்றபோது, சிறுமி மட்டும் வீட்டில் இருந்தாள்.
சிறிது நேரத்திற்குப்பிறகு அனைவரும் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டதைக் கண்டனர். வெளியில் இருந்து அழைத்தும் கதவு திறக்கப்படாமல் இருக்கவே, கதவை உடைத்தபோது உள்ளே சிறுமி ஒரு சிலையாக காட்சியளிப்பதைக் கண்டனர். பின்பு கோயில் கட்டி வழிபடத் தொடங்கினர்.