Kathir News
Begin typing your search above and press return to search.

பாதாள செம்பு முருகன் கோவிலா? திடீரென பரபரப்பாக பேசப்பட்ட இத்தலம் எங்கு உள்ளது?

திண்டுக்கல் மாவட்ட சுற்றுவட்டார மக்கள் அனைவரும் சமீபத்தில் படையெடுத்துச் செல்லும் ஒரு கோவிலாக அமைந்துள்ளது பாதாள செம்பு முருகன் கோவில்.

பாதாள செம்பு முருகன் கோவிலா? திடீரென பரபரப்பாக பேசப்பட்ட இத்தலம் எங்கு உள்ளது?
X

KarthigaBy : Karthiga

  |  4 Dec 2023 5:15 AM GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற பழனி மலை முருகன் திருக்கோவில் உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் எப்போதும் முருகனை தரிசக்க வந்து குவிந்து கொண்டே இருக்கும். பழனி முருகன் கோவில் அளவுக்கு இல்லை என்றாலும் திருமலைக்கேணி - மலைக்கேணி முருகன் கோவிலும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம். அம்மன் கோவில்களில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அகரம் முத்தாலம்மன் என இப்படி விரல் விட்டுச் சொல்லக் கூடிய கோவில்கள் இன்னமும் அதே பாரம்பரிய உயிர்ப்புடன் திருவிழாக்களை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன.


அதேநேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 40, 50 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் அல்லது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொல்லி வைத்தால் போல திடீர் திடீரென புதிய புதிய ஆன்மீக தலங்கள் உருவெடுப்பதும் பின்னாளில் அவை கண்டு கொள்ளப்படாமல் போவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அய்யலூர் பேசும் பழனி ஆண்டவர் முருக கோவில் புகழ் பெற்றது. இத்தனைக்கும் இதே அய்யலூர் பேசும் பழனி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு எதிராகத்தான் புகழ்பெற்ற வண்டி கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட மக்கள் புதிய வாகனங்களை வாங்கினால் கருப்பண்ண சுவாமி கோவிலுக்கு கிடா வெட்டி விருந்து வைப்பது இன்றளவும் தொடரும் ஒரு வழிபாட்டு முறை.


இந்த வண்டி கருப்பண்ண சுவாமியை விட ஏராளமான பக்தர்களை பேசும் பழனி ஆண்டவர் முருகன் கவர்ந்திழுத்திருந்தார். அதுவும் பழனி தைப்பூசத்தின் போது ஒரு தேரை முதுகில் கட்டி இழுத்தபடியே பாதயாத்திரையாக அவர் செல்லும் போது வழியெங்கும் ஊர் ஊராக பக்தர்கள் திரண்டு வந்து ஆசி பெறுவது வழக்கம். பின்னாளில் மெல்ல மெல்ல பேசும் பழனி ஆண்டவர் கோவில் பேசுபொருளற்றதானது. பெரிய பேசும் பழனி ஆண்டவர் மறைந்து சின்னவர் வந்தார்.


இந்த வரிசையில் கசவனம்பட்டி மவுன குரு சுவாமிகள் கோவில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் தொடங்கி நேற்று வரை கணக்கம்பட்டி சுவாமிகள் கோவில் வரை இப்படியான புதிய புதிய ஆன்மீக தலங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த வகையில் இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் எங்கு திரும்பினாலும் பாதாள செம்பு முருகன் கோவில் குறித்த பேச்சுதான். கூட்டம் கூட்டமாக மொத்தமாக கிளம்பி போய் வழிபடுகின்றனர். பாதாள செம்பு முருகன் கோவில் என்ற பலகையுடனான பேருந்தையும் இன்று கவனிக்க முடிந்தது.


திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே, ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் கருவறை, பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. அதில் 17 அடிக்கு 21 அடி என்ற அளவில் முருகன் சன்னிதி அமைந்திருக்கிறது.அதற்குள், 8-க்கு 8 அடி என்ற அளவிலான கருவறையில் முருகன் வீற்றிருக்கிறார். பாதாளத்தில் (பூமிக்கு அடியில்), செம்பு உலோகத்திலான முருகன் வீற்றிருப்பதால் 'பாதாள செம்பு முருகன்' என்ற பெயர் ஏற்பட்டது. தரைதளத்தில் ஒன்றும், பாதாளத்துக்குள் (பூமிக்கு அடியில்) ஒன்றும் என 2 கருவறைகளை கொண்டதாக இக்கோவில் உள்ளது. பாதாளத்தில் உள்ள கருவறைக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு பக்தர்கள் 18 படிகளை ஏறி இறங்கிச் செல்கின்றனர்.


பாதாள கருவறையில், முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். வலது கையில் அபய முத்திரையும், இடது கையில் வேல் ஏந்தியும் காட்சி தருகிறார். இந்த சிலைக்கு முன்பு, திருக்கோவிலூர் சித்தர் வழிபட்ட முருகன் சிலையும் உள்ளது. கோவிலின் முன்புறம் கிழக்கு நோக்கியபடி காவல் தெய்வமான சங்கிலி கருப்புசாமி கம்பீரமாக வீற்றிருக்கிறார். 15 அடி உயரம் கொண்ட இந்த சிலை ஒரே கல்லில் செய்யப்பட்டதாகும். இதேபோல் முன்மண்டபத்தில் செல்வவிநாயகர், அர்த்த மண்டபத்தில் பரிவார தெய்வமாக காலபைரவர் வீற்றிருக்கின்றனர். கோபுரத்துக்குள்ளேயே 36 அடி உயரத்தில் சிவன் சிலை அமைந்திருப்பது சிறப்பு. கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு திருநீறு (விபூதி) பிரசாதமாக வழங்கப்படுகிறது. நறுமணம் கமழும் இந்த விபூதி பல்வேறு நோய்களை குணமாக்கும் மகத்துவம் வாய்ந்ததாகும். 18 வகையான மூலிகைகளை கொண்டு இங்கு விபூதி தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


கருங்காலி மாலைகளை, முருகனின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதேபோல் கருங்காலி வேல், சந்தன வேல் ஆகியவற்றை முருகனுக்கு சாத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். கருங்காலி மாலை களை அணிவதன் மூலம் திருமண தடை நீங்கும். பஞ்ச பூதங்களின் துணை கிடைக்கும். எதிர்மறை சக்திகள் விலகும். குழந்தை பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். ராகு, கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம் சொத்துகள் சேரும். கல்வி ஞானம் அதிகரிக்கும். குல தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதுமட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு, மன இறுக்கம் விலகி உள்ளுணர்வு மேம்பாடு அடையும். ரத்த அழுத்தம் சீராகும் என்று நம்பப்படுகிறது. இதேபோல் பூஜை செய்யப்பட்ட நெல்லிக்காய் பக்தர்களுக்கு வழங் கப்படுவது குறிப்பிடத்தக்கது.


திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் வழியில் ரெட்டியார்சத்திரம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து ஸ்ரீராமபுரம் செல்லும் சாலையில், 3 கிலோமீட்டர் பயணித்தால் ராமலிங்கம்பட்டி போகர்நகரில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலை சென்றடையலாம். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News