திருமண தோஷம் நீக்கும் வடிவீஸ்வரம் அழகம்மன்!
திருமண தோஷம் நீக்கும் வடிவீஸ்வரம் அழகம்மன் ஆலயம் பற்றி காண்போம்.
By : Karthiga
நாகர்கோவில் மாநகரின் மையப் பகுதியாக விளங்குவது 'வடிவீஸ்வரம்' வடிவு என்றால் அழகு என்று பொருள். அதனுடன் ஈஸ்வரன் என்ற சொல் இணைந்து வடிவீஸ்வரம் என்று ஆனது. வடிவு - ஈஸ்வரிபுரம் இணைந்து வடிவீஸ்வரம் ஆனது என்றும் கூறுவர். இந்த வடிவீஸ்வரத்தில் பழையாற்றின் வலது கரையில் அமைந்துள்ளது அழகம்மன் சமமேத சுந்தரேஸ்வரர் கோவில். இந்த கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர். அவருக்கு ஏற்றார் போல் தேவியும் அழகேஸ்வரி என பெயர் பெற்றிருக்கிறார். ஆனால் இந்த பகுதி மக்கள் இந்த அம்மனை அழகம்மன் என்றே அழைக்கிறார்கள்.
இந்த கோவிலில் மதுரையை போன்றே அம்மனுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மூலவராக சுந்தரேஸ்வரர் இருந்தாலும் ஆலயமும் அழகம்மன் கோவில் என்றுதான் அழைக்கப்படுகிறது. இது திருஞான சம்பந்தரால் பாடப்பட்ட திருத்தலம் ஆகும். இந்த கோவில் முன் ஒரு அழகிய குலம் உள்ளது. இந்த தெப்பக்குளத்தின் கரையில்தான் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும். மூலவரின் முன்பு நந்தியும் அவரை அடுத்து தெற்கு பிரகாரத்தில் ஒரு நீண்ட மண்டபத்தில் 50 நாள் செய்யப்பட்ட அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், சேரமான் பெருமாள் மெய்கண்டார், சந்திரரேஸ்வரர், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரது திருவுருவங்களும் வைக்கப்பட்டுள்ளன.
சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு முன்பு நந்தி பகவானும் அவருக்கு அடுத்து நேர் எதிரே அழகிய கொடி மரமும் அமைந்துள்ளது . இந்த கொடி மரத்தின் இடதுபுறம் கொடிமர முருகனும் , வலது புறம் கொடிமர விநாயகரும் காட்சி அளிக்கிறார்கள் . கொடிமரத்தின் மேல் பகுதியில் கோவிலின் தளத்தில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றன. இவர்களிடையே உற்சவமூர்த்தி, மகாவிஷ்ணு, நாகராஜா, காசி விஸ்வநாதர் என நால்வரையும் ஒரே வரிசையில் வணங்கலாம். திருவிதாங்கூர் தொல்லியல் துறையினர் இங்கு கிடைத்த கல்வெட்டுகளை புதுப்பித்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அவற்றில் பழமையானது கொல்லம் ஆண்டு 644-ல் எழுதப்பட்டது. இக்கோவிலின் மூலவரான சுந்தரேஸ்வரர் லிங்க வடிவ கல் படிமத்தால் ஆனவர். ஆவுடையில் அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் .ஒரு கையில் மலர்களையும் மற்றொரு கையில் நெற்கதிர்களையும் வைத்துள்ளார் . கர்நாடக இசை அமைப்பாளர் நீலகண்ட சிவன் 1839 ஆம் ஆண்டு வடிவீஸ்வரத்தில் பிறந்தார். அவர் தனது திருநீலகண்ட போதம் என்ற படைப்பில் தனது பிறந்த இடத்தை இரண்டு முறை குறிப்பிட்டுள்ளார்.
அழகம்மன் கோவிலில் கடந்த 2015 - ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது . இந்த கோவிலில் 14 லட்சம் செலவில் பௌர்ணமி தேர் செய்யப்பட்டுள்ளது.இக்கோவில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவிலாகும். கோவிலுக்கு தேவையான திருப்பணிகளை அழகப்பன் சுந்தரேஸ்வரர் அறக்கட்டளையினர் ஒருங்கிணைந்து மேற்கொள்கிறார்கள். வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலை பௌர்ணமி அன்று வலம் வரும் பக்தர்களின் குறையை தீர்த்தருளும் தாயாக இவ்வாளை அன்னை அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5.45 மணிக்கு பள்ளியறை பூஜை காலை 6:00 மணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு காலை 11 மணிக்கு நடை சாத்தப்படுகிறது .மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு ஆறு முப்பது மணிக்கு தீபாராதனை இரவு 7:45 மணிக்கு ஸ்ரீபலி முடிந்து மீண்டும் இரவு எட்டு மணிக்கு நடை சாத்தப்படுகிறது. நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திலும் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து ஒன்னே கால் கிலோ மீட்டர் தூரத்திலும் அழகம்மன் கோவில் அமைந்துள்ளது.