Kathir News
Begin typing your search above and press return to search.

வேண்டிய வரம் தரும் வைகாசி விசாகம்!

வைகாசி மாதம் விசாகத்துடன் கூடிய பௌர்ணமி அன்று முருகப் பெருமான் அவதாரம் செய்த வைகாசி விசாகத்தின் பெருமை பற்றி காண்போம்.

வேண்டிய வரம் தரும் வைகாசி விசாகம்!
X

KarthigaBy : Karthiga

  |  21 May 2024 12:17 PM GMT

வைகாசி மாதம் விசாகத்துடன் கூடிய பௌர்ணமி அன்று முருக பெருமான் அவதாரம் செய்தார். முருகன் என்றாலே 'அழகு ' என்று பொருள். ஒரு சமயம் உலகத்தையே அச்சுறுத்தி கொண்டிருந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழிப்பதற்காக அற்புதமான ஆற்றல் மிக்க மிகப்பெரிய அவதாரம் தேவைப்பட்டது. தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறக்க அதிலிருந்து ஆறு நெருப்பு பொறிகள் வெளிப்பட்டது. அது மூன்று உலகத்தையும் தகித்தது. அதை ஒருவராலும் நெருங்க முடியவில்லை.

அந்த நேரத்தில் அக்னி பகவான் அந்த ஆறு நெருப்பு பொறிகளையும் தன் கையில் ஏந்தினார். அக்னி பகவானின் கையை கூட அந்த நெருப்பு பொறிகள் தகிக்க ஆரம்பித்தது. தாங்க முடியாத வெப்பமாக இருந்த அந்த நெருப்பு பொறிகளை அக்னி பகவான் சரவண பொய்கையில் கொண்டு வந்து சேர்த்து குளிர்வித்தார். அந்த ஆறு நெருப்பு பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறிட ஆறு குழந்தைகளையும் வளர்க்க வேண்டும் அல்லவா அதற்காக ஆறு கார்த்திகை பெண்கள் சரவண பொய்கையில் தோன்றிய அந்த குழந்தைகளை கையில் எடுத்தனர். ஆறு குழந்தைகளும் ஒரு குழந்தையாக மாறியது. ஆறுமுகம், 12 கைகள், இரண்டு கால் என்று அற்புதமான ஒளி பெருந்திய தோற்றத்துடன் முருக பெருமான் காட்சியளித்தார்.

முருகப்பெருமான் பிறந்த அந்த வைகாசி விசாகத் திருநாளை உலகமே கொண்டாடியது. ஆறுமுகத்துடன் காட்சியளித்ததால் அவருக்கு ஆறுமுகன் என்ற திருப்பெயர் உண்டானது. வைகாசி விசாகம் அன்று பிறந்ததால் 'விசாகன்' என்ற திருநாமமும் ஏற்பட்டது. முருகப்பெருமான் அவதரித்த இந்த வைகாசி விசாகத் திருநாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும். குழந்தைப்பேறு உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். சகலதோஷமும் விலகும்.

வைகாசி விசாக தினத்தில் விரதம் இருப்பது மிகுந்த புண்ணிய பலன்களைத் தரும் .அன்றைய தினம் அதிகாலையில் குளித்துவிட்டு இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்தோடு குரு பகவானை, மனதில் நினைத்து தியானித்து விரதத்தை தொடங்கலாம். வீட்டின் பூஜை அறையில் உள்ள முருக பெருமான் படத்தை அலங்கரித்து வெற்றிலை ,பாக்கு ,பழம் ,தேங்காய் ஆகியவற்றை நெய்வேதியம் செய்யலாம். வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து வேல்விருத்தம், சண்முக கவசம், கந்த குரு கவசம் ,கந்த சஷ்டி கவசம் போன்றவற்றை சொல்லி முருகனை வணங்க வேண்டும் .

வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்துவரலாம் .அன்றைய தினம் முழுமையான உணவு அருந்தாமல் இருப்பது நல்ல பலனைத் தரும். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் வேகவைத்த உணவுகளை ஒருவேளை மட்டும் சாப்பிடலாம் .தினை மாவு ,தேன், பழங்கள் போன்றவற்றையும் சாப்பிடலாம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப்பெறும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News