விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கேட்டாலே நம் கனவுகள் அனைத்தும் ஈடேறும் என்பது திண்ணம் !
By : Dhivakar
மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு பெருமானை, விஸ்வேஸ்வரன் என்கிறோம். இவரே உலகை ஆழ்பவர். இவரே பரம்பொருள். வைணவத்தின் மூர்த்தியான விஷ்ணு பெருமானை வணங்க பல வழிபாட்டு முறைகள் இருந்தாலும். முக்கிய வழிபாட்டு முறையாக இருப்பது விஷ்ணு சஹஸ்ரநாமம். இது மஹா விஷ்ணுவின் 1000 பெயர்களை ( நாமங்களை) தாங்கியது. இந்த விஷ்ணு சஹஸ்சரநாமத்தின் மூலம் மஹாபாரதத்தின் அனுசாசன பர்வத்தில் அதாவது 149 ஆம் அத்யாயத்தில் உள்ளது. இதன் மற்ற இணை மூலங்களாக பத்ம புராணம், ஸ்கந்த புராணம், மற்றும் கருட புராணத்திலும் இடம் பெற்றுள்ளது.
மாதாவாச்சார்யா அவர்களின் நம்பிக்கையின் படி, விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் உள்ள ஒவ்வொரு பெயருக்கு பின்னும் கிட்டதட்ட நூற்றுக்கணக்கான அர்த்தம் நிரம்பியுள்ளது. எனவே இந்த மந்திர பாராயணம் மிகவும் சக்தி மிகுந்ததாக கருதப்படுகிறது. ஒருவருக்கு இதன் பொருள் தெரியாமல் இதனை பாராயணம் செய்தால் கூட, அவர்களுக்கு இதன் முழு பலன் கிடைக்கும் வல்லமை உண்டு. மஹாபாரதத்தில் வரும் பீஷ்மர் இந்த மந்திரத்தை முழுமையாக நம்பினார். இதனை உச்சரித்தாலோ அல்லது கேட்டாலோ கூட ஒருவரின் பாவங்களும் அச்சமும் விலகும் என நம்பினார்.
கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார், என்னை யார் ஒருவர் தொடர்ந்து பாராயணம் செய்கிறார்களோ, என்னை வந்து அடைவதில் தீவிரமாக இருக்கிறார்களோ அவர்களின் அருகில் நான் இருப்பேன் என்கிறார். கடவுளுக்கு நமக்கு என்ன தேவை என்பது முன்னரே தெரியும். எனவே எந்த எதிர்பார்ப்பும் இன்றி பரிபூரண பக்தியுடன், சரணாகதியுடன் அவரை வழிபடுவது அவசியம். அந்த அடிப்படையில், விஷ்ணு சஹஸ்ரநாமத்தை கேட்டாலே நம் கனவுகள் அனைத்தும் ஈடேறும் என்பது திண்ணம்.
நமக்கு ஏதேனும் சாபம் அல்லது துர் அதிர்ஷ்டம் இருந்தால், விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்வதன் மூலம் நீங்கும் என்கின்றனர் ஜோதிட நிபுணர்கள். நம் ஜாதகத்தின் படி ஏதேனும் கோள்களில் பிரச்சனை இருப்பின், இதனை ஜபிப்பதால் அந்த பிரச்சனைகள் தீரும் என்கின்றனர். மேலும் பொருளாதார நெருக்கடிகள், சிக்கல்கள் ஆகியவை தீரவும் இந்த மந்திர உச்சாடனை அருள் புரியும் என்கின்றனர்.
மேலும் இதனை தொடர்ந்து சொல்வதாலும், கேட்பதாலும் மன பலம் அதிகரித்து, உளவியல் ரீதியாக நமக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. எனவே எந்த சவால்கள் வாழ்வில் வந்தாலும், இறைவனின் அருளால் அதனை எதிர்கொள்ள முடிகிறது.
Image : Webdunia