அனைத்து கலைகளிலும் வல்லவராக வேண்டுமா? நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் இதுதான்
அனைத்து விதமான கலைகளிலும் நீங்கள் வல்லவராக திகழ வேண்டும் எனில் காமத்தூர் ஈசனை வழிபட வேண்டும்.
By : Karthiga
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று. சந்திரன் சாபம் தீர்த்த தலம் ஆதிசங்கரரால் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம் என பல்வேறு சிறப்புகளை கொண்டதாக விளங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள காமக்கூர் என்ற காமத்தூர் சந்திரசேகர சுவாமி திருக்கோவில் இந்த கோவில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணிக்கு அருகில் உள்ள காமக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் ஆகும்.
மூலவர் இளம்பிறைநாதர் ,பிறைசூடிய பெருமான் , சந்திரசேகரசுவாமி என்ற பெயர்களாலும் அம்பாள் அமிர்தாம்பிகை என்ற திருநாமத்துடனும் அழைக்கப்படுகிறார்கள். அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களில் இக்கோவிலில் முருகப்பெருமானை பற்றி பாடியுள்ளார். இக்கோவில் தேவார வைப்புத்தலமாகவும் கருதப்படுகிறது. ஒருமுறை கோவிலின் வழியாக ஒருவர் தன் குடும்ப உறுப்பினர் அஸ்தி கலசத்துடன் காசிக்கு பயணமாக சென்றார். அப்போது கலசத்தில் இருந்த எலும்பு துண்டுகள் அரளி மலர்களாக மாறியது. எனவே இந்த ஆலயம் காசிக்கு நிகரான தலமாக போற்றப்படுகிறது.
காசியில் செய்யும் தர்ப்பண காரியங்களை இங்கும் செய்யலாம் என்கிறார்கள். ஒருமுறை ஜெயம் கொண்ட சோழனின் கனவில் சிவபெருமான் தோன்றினார். கனவில் அவர் கூறியபடி தான் மன்னன் இந்த ஆலயத்தை கட்டி திருப்பணிகள் செய்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாலய இறைவன் முருகப்பெருமான், சந்திரன், அர்ஜுனன் மன்மதன், ரதி, தசரதன், விவஸ்வன் என்ற மன்னன் காமகோடி என்ற பெண்மணி ஆகியோர் வழிபட்டு தங்களின் பாவங்கள் நீங்க பெற்றுள்ளனர்.
தட்சணின் சாபத்திலிருந்து விடுபட சந்திரன் வழிபட்ட தலம் இந்த காமக்கூர் சிவன் கோவில் .இந்த தளத்தில் அருள் பாலிக்கும் ஈசன் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நிவர்த்தி செய்ததால் சந்திரசேகரர் என்று திருநாமம் இவருக்கு வந்தது .பழங்காலத்தில் காமநகர் என்றும் காமத்தூர் என்றும் அழைக்கப்பட்ட இந்த இடம் பின்னர் காமக்கூர் என மாறியது. காமாட்சி அம்மை சன்னதி உள்ளது. எனவே பழங்காலத்தில் காமத்தூர் எனப் பெயர் பெற்றது .
தட்சணின் சாபத்தால் கலைகளை இழந்து வருந்திய சந்திரனுக்கு சாப நீக்கம் தந்தவர் இவர்தான். சந்திரனின் கலைகளில் ஒன்றையே தன் சிரத்தில் ஏற்று சந்திரசேகரராக திருநாமம் கொண்டார். இந்த மூலவரை சோமன் வழிபட்டு பலன் அடைந்ததால் திங்கட்கிழமை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு . சந்திரன் ராசிநாதனாக கொண்ட கடக ராசிக்காரர்கள் இந்த பெருமானை தரிசித்த வழிபட்டால் தடைகள் விலக பெறுவார்கள். ஜாதக ரீதியாக சந்திரன் நீச்சம் அடைந்தவர்கள் இங்கு வழிபட்டால் தோஷ நிவர்த்தி ஏற்படும்.
இசை, ஓவியம், நடனம், கவிதை உள்ளிட்ட கலைகளில் சிறப்படைய விரும்புபவர்கள் திங்கட்கிழமை தினங்களில் இங்கு வந்து வெண்ணிற மலர்களால் மாலை சாத்தி வழிபடுவது மேன்மை தரும். ஆரணியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது காமக்கூர் திருத்தலம் . ஆரணியிலிருந்து ஏராளமான பஸ் வசதிகள் இங்கு செல்ல இருக்கின்றன.