வழிபாட்டில் கூடுதல் பலனை பெற, எந்த மலர்களை எந்த கடவுளுக்கு அர்பணிக்க வேண்டும்?
By : G Pradeep
மலர்கள் இயற்கை அன்னை வழங்கிய வரபிரசாதங்களில் மிக முக்கியமானது. மலர்கள் என்பது மங்களகரமானது, புனிதமானது இந்து மரபில் வழிபாட்டுக்குரியதாக கருதப்படுகிறது. வண்ணங்களாலும், வாசனைகளாலும் அனைவரின் மனதையும் கவர்கிற மலர்கள் அற்ற பூஜைகளை, பிரார்த்தனைகளை இந்து மரபில் யாரும் நினைத்தும் பார்க்க இயலாது.
எனில் எந்த மலர்களை வேண்டுமானாலும் இறைவனுக்கு அளிக்கலாமா என்றால். இல்லை என்பதே பதில். காரணம் சாஸ்திரங்களில் ஒவ்வொரு மலர்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமும், முக்கியத்துவமும் உண்டு.
மல்லிகை இந்த மலருக்கென்று பல மருத்துவ குணங்கள் உண்டு. மல்லிகையுடன் செந்தூரத்தையும் வைத்து ஹனுமனை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை
அடுத்து சாமந்தி மலருக்கு வழிபாட்டில் தனியிடம் உண்டு. இந்த மலரின் தனித்துவம் என்பது இதனை முழுமையாக மாலை கட்டியும் கடவுளுக்கு அர்பணிக்கலாம். அல்லது இதனை உதிர்த்து இதன் இதழ்களை கை நிறைய அள்ளியும் கடவுளுக்கு தூவலாம். குறிப்பாக சாமந்தி மாலை விநாயகர் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது.
அடுத்து தாமரை. இது மஹாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. மேலும் மஹாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான மலர் என்பதால். ஐஸ்வர்யம் வேண்டி செய்கிற பூஜைகளில், மற்றும் இலட்சுமியை வழிபடுகிற போது நேர்மறை ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை.
பாரிஜாத மலர். இது இரவில் பூக்கும் தன்மை கொண்டது. இந்த மலரானது பாற்கடலை கடைகிற போது இந்திரனுக்கு கிடைத்ததாகவும். அதை அவர் சொர்கத்திற்கு எடுத்து சென்று பாதுகாத்தார். இந்த மலரானது மஹா விஷ்ணு வழிபாடுக்கு மிகுவும் உகந்ததாகும்.
சிவப்பு செம்பருத்தி காளி வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. செம்பருத்தியின் வடிவம் காளியின் நாவினை குறிப்பதாகவும், அதன் அடர் சிவப்பு நிறம் காளியின் ருத்ர ரூபத்தை குறிப்பதாகவும் இருக்கிறது.
இதிலும் விதிவிலக்காக நெல்லி பூவும் கனியும் தேவி பார்வதிக்கு அர்பணிக்க கூடாது, வில்வ இலைகள் சூரிய தேவருக்கு அர்பணிக்க கூடாது. அரளி பூ ஶ்ரீ ராமருக்கு அர்பணிக்க கூடாது என்பது போன்ற நெறிமுறைகளும் உண்டு
மலர்கள் என்பது பார்வைக்கு குளிர்ச்சியையும், மனதிற்கு இதமான ஓர் உணர்வையும் மகிழ்ச்சியை தருவது என்பதாலேயே அது இறைவனுக்கு அர்பணிக்கப்படுவதில் முதலிடம் வகிக்கிறது. மேலும் அதன் நறுமணம் அதை வைத்திருக்கும் இடத்தில் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.