அமாவாசை, பெளர்ணமிகளில் விரதம் இருக்க சொல்வது ஏன்?
By : Kanaga Thooriga
சூரியன் சந்திரன் என்பது பிரபஞ்சத்தின் முக்கிய அம்சம் மாத்திரம் அல்ல. அதையும் தாண்டி பல நன்மைகளை செய்யக்கூடியது. சந்திரன் எனும் நிலவு மனித உடலின் மீது அதிக ஆதிக்கத்தை செலுத்த கூடியதாகும். நாம் கேள்வி பட்டிருக்கலாம், நிலவு அல்லாத நாளில் அதாவது அமாவசையில் ஒருவர் பதட்டமாக, நிதானமின்றி அல்லது மன ரீதியான பிரச்சனைகளை அதிகமாக எதிர்கொள்வார்கள் என்று. எனவே நிலவின் இருப்பிற்கும் இல்லாமைக்கும் ஏராளமான முக்கியத்துவம் உண்டு.
அதனால் தான் நம் மரபில் அமாவசை மற்றும் பெளர்ணமி ஆகிய நாளில் விரதம் இருப்பது, சிறப்பு பூஜைகள் போன்றவை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஆன்மீக சாதனாக்களில் இருப்பவர்களில் பெளர்ணமி மிக முக்கியமான நாளாக சொல்லப்படுகிறது. இந்நாளில் ஒருவருக்கு ஆத்ம ரீதியான தாக்கம் அதிகமாக இருக்குமாம். மேலும் இந்து மரபுகளின் படி, பெளர்ணமி என்பது மிகவும் புனிதமான நாளாகும். இந்நாளில் விரதம் இருந்து இறைவனை தரிசிப்பது வழக்கம்
குறிப்பாக பெருமாளை, இந்நாளில் விரதம் இருந்து நதியில் நீராடி ஒருவேளை உணவு உண்டு தரிசித்து வர பல வித சங்கடங்கள் தீரும் என்பது ஐதீகம். இதற்கான அறிவியல் காரணம், இந்நாளில் உடலில் உள்ள அமிலத்தன்மை குறைந்திருக்கும் என்பதால் இப்படியொரு வழக்கம் நம்மிடையே இருந்துள்ளது. மேலும் இப்படியான நாளில் நாம் விரதம் இருப்பதால் அது உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துகிறது மற்றும் இதனோடு வழிபாடு சேருகையில், மனம் அமைதியடைகிறது.
பெளர்ணமி விரதம் என்பது 12 மணி நேரம் கடைப்பிடிக்கும் ஒன்றாகும். இந்நாளில் ஒருவர் அரிசி, கோதுமை போன்ற திடப்பொருள்களை தவிர்ப்பர். ஒரு சிலர் நீர ஆகாரம் எடுத்து கொள்வதுண்டு. முழுமையான நிலவு நிறைந்து இருக்கும் பெளர்ணமி நாளில் எதையும் தொடங்குவதை புனிதமாக கருதுகின்றனர். காரணம், இது செல்வ வளம் மற்றும் சகல செளகரியங்கள் நிறைந்திருப்பதன் அடையாளமாகும்.
இதை போலவே அமாவாசையில் நல்ல காரியங்களை செய்வதை தவிர்பார்கள். அதுமட்டுமின்றி புதன்கிழமைகளில் அமாவாசை தோன்றினால், கால சர்ப தோஷ பூஜை செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு செய்வதால் ராகுவை கட்டுப்படுத்த முடியும் என்பது நம்பிக்கை.