Kathir News
Begin typing your search above and press return to search.

அனுமனுக்கு வடை மாலை அணிவித்து வழிபடுவது எதனால்?

தூய்மையான மனதுடனும் ராமபக்தியுடனும் தன்னை வழிபடுபவர்களுக்கு சகல வளங்களையும் தரும் அனுமானுக்கு வடைமாலை சாற்றி வழிபடும் காரணம் பற்றி காண்போம்.

அனுமனுக்கு வடை மாலை அணிவித்து வழிபடுவது எதனால்?

KarthigaBy : Karthiga

  |  2 Jan 2024 4:45 AM GMT

சிரஞ்சீவி பட்டம் பெற்றவர்களில் முக்கியமானவர் ஆஞ்சநேயர். இவர் ராமாயண இதிகாசத்தில் தலைவனாக வைத்து போற்றப்படும் ராமரின் முதன்மை பக்தனாகவும் அவரது தூதுவனாகவும் இருந்து பேறுபெற்றவர். ராம நாமத்தை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக விண்ணுலக வாழ்வை மறுத்து இந்த பூமியிலேயே தங்கியவர் என்ற பெருமைக்குரியவர். இத்தகைய சிறப்பு கொண்ட ஆஞ்சநேயருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.


ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதியும் குரங்கு உருவத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இருவரின் உடலில் இருந்தும் ஜோதி வெளிப்பட்டு ஒரே ஜோதியாக நின்றது. அதனை வாயு பகவான் கொண்டு வந்து தவம் செய்து கொண்டிருந்த அஞ்சனாவிடம் பிரசாதமாக கொடுத்தார். அதன் மூலம் பிறந்தவர்தான் ஆஞ்சநேயர். சிவனின் ஜோதியில் இருந்து பிறந்தவர் என்பதால் 'ருத்ர வீரிய சமுத் பவாய நமஹ' என்ற நாமம் அவருக்கு உண்டானது .இப்படி ஆஞ்சநேயர் அவதரித்தது மார்கழி மாதம் மூல நட்சத்திரம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.


அனுமனுக்கு அன்றைய தினம் பல்வேறு வகைகளில் அலங்காரங்கள் செய்து கோவில்களில் வழிபாடு நடக்கும். அதில் ஒன்றுதான் வடைமாலை அணிவித்து வழிபடுவது. வடைமாலை அணிவிப்பது எதனால் என்பது பற்றி ஒரு புராணக் கதை கூறுகிறது. ராவணனை வதம் செய்து அயோத்தி திரும்பிய பின்னர் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது . அதில் அனைவரும் பங்கேற்று இருந்தனர். அனுமனும் கலந்து கொண்டார். அந்த சபையில் அனுமனுக்கு ஒரு உயர்ந்த பரிசு அளிக்க விரும்பிய சீதாதேவி தன்னுடைய கழுத்தில் இருந்து ஒரு மதிப்பு மிக்க முத்துமாலையை அவருக்கு பரிசளித்தார்.


அதை வாங்கிய அனுமன் அந்த மாலையில் இருந்து ஒவ்வொரு முத்தாக எடுத்து கடித்து உடைத்து தூக்கி வீசினார். இதை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.அவரது செய்கையை பற்றி சீதா தேவியே அவரிடம் கேட்கவும் செய்தார். அதற்கு அனுமன் .தாயே தாங்கள் பரிசளித்த முத்துமாலையில் இருந்த ஒரு முத்தில் கூட ராமரசம் இல்லை. ராமரசம் இல்லாத எந்த பொருளும் எனக்கு உயர்வானது அல்ல என்றார். சீதாதேவி மட்டுமல்ல அங்கிருந்து அனைவருமே அனுமனின் பக்தியை நினைத்து பூரித்து போயினர். அந்த அனுமனுக்கு ராம நாமத்தை சொல்லியபடியே வடையை கைகளால் தட்டி சுட்டு பின் மாலையாக கோர்த்து அணிவிக்க வேண்டும். அதை கடித்துப் பார்க்கும் அனுமன் அதில் ராமரசம் இருப்பின் அதை அணிவித்து பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை தருவார் என்பது நம்பிக்கை.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News