மௌனம் ஏன் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது?
மௌனத்தை கடைபிடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள்
By : Karthiga
மௌனம் ஆன்மீகத்தில் மிகவும் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பேசிய வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம் என்பது பொன்மொழி.
ஒருவன் பேசிக்கொண்டே இருக்கும்போது அவனுடைய ஆற்றல் அதிகமாக விரயமாவதுடன் அவனது எண்ணங்கள் எல்லாம் செயலில் நிலைத்திருக்க மறந்துவிடும். தேவையற்ற பேச்சுக்களும் தேவையற்ற சிந்தனைகளும் எழும். எங்கே பேச்சு குறைகிறதோ அங்கு செயல்திறன் அதிகரிக்கும். மவுனம் மனதை பலப்படுத்தும். நிறைகுடம் தளும்பாது குறைகுடம் கூத்தாடும் போன்ற பொன்மொழிகளும் அறிஞர்கள் அதிகம் பேசமாட்டார்கள் என்பதை நமக்கு உரைக்கிறது.
திருவள்ளுவரும் பயனில சொல்லாமை என்ற அதிகாரத்தில் பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பதனால் ஏற்படக்கூடிய நன்மைகளைப் பற்றி எடுத்துரைத்துள்ளார். பேச்சு என்பது வெள்ளிக்காசானால் மௌனம் என்பது தங்கக்காசு என்றும் கூறுவர்.
பேச்சுகளைக் குறைத்து வாழ்வில் மௌனத்தை கடைபிடிக்கும்போது நல்ல சிந்தனைகளும் நேர்மறையான எண்ணங்களும் உருவாகும்.
ஞானிகளும் ரிஷிகளும் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்த்து மௌனத்தை கடைபிடிப்பதனால்தான் இறைவனோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களாக உள்ளனர். மௌனம் அதிகரிக்க மனோபலம் அதிகரிக்கும். சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும். செயல்திறன் அதிகரிக்கும். வாழ்வில் வெற்றி பெற்ற பலரும் மௌனத்தை ஆயுதமாக கொண்டவர்களாகவே இருப்பார்கள்.