கோவிலுக்கு செல்லும் போது அசைவம் உண்ணக்கூடாது என்பது ஏன்?
By : G Pradeep
ஆன்மீக பாதையில் உண்ணும் உணவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக சைவம், அசைவம் என்பது பல காலங்களாகவே பேசு பொருளாக இருக்கிற விஷயம்.
சைவத்தை சிறந்த உணவு முறையாக இன்றைய மருத்துவமும் சரி, ஆன்மீகமும் சரி பரிந்துரைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு சிலர் கருணை, காருண்யம் போன்ற உயிர்களின் மீதான ஜீவகாருண்ய அடிப்படையில் சைவத்தை பரிந்துரைக்கின்றனர்.
ஆன்மீக ரீதியாக பார்க்கிற போது, அசைவம் என்பது நம் கர்மாவை கூட்டும் ஒரு அம்சமாக கருதப்படுகிறது. வினைகளை அழித்து, முக்தியை தேடுவதே ஆன்மீக தேடலின் நோக்கம் என்றிருக்க, நாம் அசைவம் உண்டு கர்மாவை மேலும் கூட்ட வேண்டாம் என சொல்லப்படுவது ஒரு ரகம்.
இதை அறிவியல் பூர்வமாக அணுகினால், சைவ உணவுகளான காய்கறிகள், பழ வகைகளை உண்கிற போது அவை உடலினுள் செரிக்க எடுத்து கொள்ளும் நேரமானது மிகவும் குறைவானதாகும். அதுவே நாம் அசைவத்தை உண்கிற போது, அது நம் உடலில் தங்கியிருந்து, செரிமானம் ஆவதற்கான நேரம் மிக அதிகம்.
அந்த அதிகமான காலகட்டத்தில் உடலில் பெரும் மந்த நிலை ஏற்படுகிறது. அந்த மந்தநிலை, நம்மை ஆன்மிக சாதனாக்களையோ, அல்லது பூஜைகளையோ செய்யவிடாமல் தடுக்கிறது.
மேலும் ஒரு உயிரை கொல்கிற போது அதன் மூலம் அந்த விலங்கிற்கு ஏற்படும் மன உணர்வுகள் ஆன்மீகத்தில் மிக முக்கியமானதாக பேசப்படுகிறது. தன்னை ஒருவர் கொல்கிறார் எனும் போது மனதில் அதற்கு ஏற்படும், அச்சம், படபடப்பு, இயலாமை, கோபம் ஆகிய பலவிதமான எதிர்மறை உணர்வுகளுடன் அந்த உயிர் நீங்குகிறது. அந்த விலங்கினை நாம் உண்கிற போது அதே விதமான படபடப்பு, கோபம், இயலாமை போன்ற உணர்வுகள் உளவியல் ரீதியாக நம்மை வந்து சேரும்.
இது போன்ற காரணங்களினாலேயே, அசைவ உணவை உண்டு விட்டு கோவில்களுக்கு செல்ல வேண்டாம் என்று நம் மரபில் அறிவுருத்தப்பட்டது, மனதிலும் உடலிலும் ஒருநிலைபடுத்தும் தன்மை இல்லாத வேளையில் நம் மனம் இறையின் சிந்தனையில் இல்லாமல் போகும் வாய்ப்பு உண்டு.
எனவே உணவை தேர்வு செய்யும் போது, அறம், ஒழுக்க விழுமியங்களை நாம் நிச்சயம் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும். ஆனாலும் கூட உணவு விஷயத்தில் உடல் எதை சொல்கிறதோ அதை உண்ண வேண்டும். ஆனால் நாமோ நம் மனம் எதை சொல்கிறதோ அதை உண்கிறோம். உணவு விஷயத்தில் உங்கள் மனதை காட்டிலும் உடலுக்கு நன்கு தெரியும் தனக்கு எது தேவை என்பது என உணவை தேர்வு செய்யும் முறை குறித்து சத்குரு அவர்கள் பேசியிருக்கிறார்.