இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்யத்தை சுவை பார்க்க கூடாது என்பது ஏன்?
By : Kanaga Thooriga
இறைவனுக்கு நாம் பல்வேறு வகையான அர்ப்பணங்களை வழங்குகிறோம். மலர்கள், வாசனை பொருட்கள், ஆரத்தி, என நீளும் வரிசையில் முக்கியமானது உணவு பொருட்கள். இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவு பொருட்களை நெய்வேத்யம் என்று அழைக்கிறோம். இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, வழிப்படு முடிந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பிரசாதம் என்பது இறைவனின் அருளை நாம் கையில் ஏந்தும் ஒரு வாய்ப்பு. எனவே தான் தீர்த்தம் தொடங்கி, ஆரத்தி,திருநீறு என அனைத்தையும் தலை தாழ்த்தி பக்தி பரவசத்துடன் கண்ணில் ஒற்றி நாம் பெற்று கொள்கிறோம். எனவே இறைவனுக்கு படைக்கும் நெய்வேத்தியத்தை தயார் செய்வதில் சில நெறி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமானது சுத்தம். இறைவனுக்கான நெய்வேத்யம் அர்ப்பணிக்க தூய்மையான பக்தியும் மனதும் தான் முதன்மையானது. இருப்பினும் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அடுத்து முக்கியமாக சொல்லப்படும் நெறிமுறை, நெய்வேத்யத்திற்காக தயார் செய்யப்பட்ட உணவை ருசி பார்க்க வேண்டாம் என்பது. இறைவனுக்கான உணவு சுவையாக இருக்க வேண்டும் என்கிற நம்முடைய எண்ணத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். எந்த எதிர்பார்ப்புமற்ற பக்தியுடன் நாம் இறைவனுக்கு படைக்கிற உணவு நிச்சயமாக சுவையாக தான் இருக்கும்.
அடுத்த முக்கியமான நெறிமுறை, இறைவனுக்கு படைத்து வழங்கப்படும் பிரசாதத்தை வீணாக்காமல் இருப்பது. இறைவனின் அருளை நம் வசமாக்க நினைப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் தேவைக்கு அதிகமானதை பெற்று வீணாக்கமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அனைத்திற்கும் மேலாக மிக முக்கியமாக சொல்லப்படும் நெறிமுறை, பிரசாதத்தை உண்ணும் போது முழு விழிப்புணர்வுடன் நன்றியுடன் உண்ண வேண்டும். ஒவ்வொரு பருக்கை அரிசியும். ஒவ்வொரு துளி உணவும் பல்வேறு சிரமங்களை, இடையூறுகளை சந்தித்தே நம் கைகளை வந்து சேர்கின்றன. அப்படிப்பட்ட உணவுக்கு நன்றி சொல்லி, நம்மை வந்து சேர்ந்திருக்கும் தெய்வீக அருளை விழிப்புணர்வுடன் உண்ண வேண்டும். பிரசாதம் உண்ணும் போது பேசுவது, வேறேதேனும் புத்தகம் படிப்பது, அலைபேசி பார்ப்பது போன்ற செயல்களை தவிர்ப்பது சிறப்பு தரும்.
எனவே தூய்மையான பக்தியுடன் இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் எதையும் அவர் ஏற்றுக்கொள்வார். அவர் அருள் நிறைந்த பிரசாதத்தை நாமும் பக்தியுடன், நன்றியுடன் பெற்று கொள்ள வேண்டும்.