தமிழ் மாதங்களில் பங்குனி மாதம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
பங்குனி மாதங்களில் காணப்படும் முக்கியமான விரதங்கள்.
By : Bharathi Latha
தமிழ் மாதங்களில் முக்கியமாக பங்குனி மாதம் பல்வேறு கடவுள்களின் திருவிழாக்கள் மற்றும் திருமணங்கள் நடைபெறும் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. காரணம், கடவுள் மேலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்து மனிதர்களுடன் மனிதர்களாக வாழ்ந்து திருமணம் செய்யும் ஒரு மாதமாக இந்த மாதம் கருதப்படுகிறது. பங்குனி மாத சிறப்புகள் விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை உள்ளடக்கியது. பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி போன்ற விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி போன்ற வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குருபூஜையும் இம்மாதத்தில் நடைபெறுகின்றன.
இயற்கையை கவனித்தால் கூட நன்றாக தெரியும். இம்மாதத்தில்தான் தாவரங்களில் உதிர்ந்த இலைகள் தளிர்க்க ஆரம்பிப்பதால் இம்மாதம் வசந்த காலத்தின் தொடக்கமாக உள்ளது. பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி வரும் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. மேலும் மகாலட்சுமி, அர்ஜூனன் ஆகியோர்களின் அவதார தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது. குறிப்பாக கோவில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் ஒரு மாதமாக இது திகழ்கிறது.
பெரும்பாலோனோர் தங்களின் குலதெய்வ வழிபாட்டினையும் இந்நாளில் மேற்கொள்கின்றனர். தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாளாதலால் இந்நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் கல்யாண விரதம் என்றழைக்கப்படுகிறது. நல்ல திருமண வாழ்க்கை வேண்டி மணமாகாதோரும், திருமண வாழ்வானது வளமாகத் தொடர மணமானோரும் இவ்விரதத்தினை மேற்கொள்கின்றனர். முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும் தேர்திருவிழா பிரசித்தி பெற்றது. அனைத்து கடவுள்களுக்கும் திருவிழா எடுக்கும் ஒரு மாதமாகவும் பங்குனிமாதம் அறியப்படுகிறது.
Input & Image courtesy:Malaimalar