Kathir News
Begin typing your search above and press return to search.

இறைவனுக்கு நிகராக இயற்கையின் அம்சமான ஸ்தல விருட்சத்தை வணங்குவது ஏன்?

இறைவனுக்கு நிகராக இயற்கையின் அம்சமான ஸ்தல விருட்சத்தை வணங்குவது ஏன்?

Kanaga ThoorigaBy : Kanaga Thooriga

  |  28 Oct 2021 12:31 AM GMT

மரங்கள் என்பது நம்பிக்கை. மரங்கள் மனிதர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை மாறாக மனிதர்களுக்கு கொடுப்பது ஒன்றையே தன் கடமையாக செய்து வருகிறது. மரங்களுக்கென பாரம்பரியம் உண்டு, மருத்துவ ரீதியான பண்புகள் உண்டு, அவை நல்கும் நிழல் என மரங்களின் பண்புகளை சொல்லி கொண்டே போகலாம். மரங்களின் தன்மைகள் இறையின் தன்மைக்கு ஒப்பானது என்பதாலேயே திருத்தலங்களில் மூர்த்தியை வணங்குகிற போது ஸ்தல விருட்சத்தையும் வணங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

திருக்கோவிலுக்கென பிரத்யேகமாக இருக்கும் மரத்தை, திருத்தலத்துடன் தொடர்புடைய மரத்தை ஸ்தல விருட்சம் என அழைப்பது வழக்கம். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு விருட்சம் உண்டு அதற்கென தனித்த புராணங்களும் உண்டு. இந்து மரபின் படி, நாம் நதிகளை, ஏரிகளை, மலைகளை, மரங்களை, தாவரங்களை ஏன் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நன்றி கூறி வணங்கும் தன்மை கொண்டவர்கள். நம் பாரம்பரியத்தில் மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஒவ்வொரு கோவிலிலும் நீங்கள் கவனித்து பார்த்தால் மூன்று முக்கிய அம்சத்தை இருக்கும். ஸ்தலம், தீர்த்தம் மற்றும் மூர்த்தி. ஸ்தலம் என்பது கோவிலையும், தீர்த்தம் என்பது அக்கோவிலின் நீர் நிலையையும், மூர்த்தி என்பது அக்கோவிலின் மூலவரையும் குறிப்பதாக உள்ளது. அனைத்து ஜீவ ராசிகளும் மகிழ்வுடன், மன அமைதியுடன் வாழ்வதற்கு இடம், நீர் நிலை, மரம், மற்றும் கடவுளின் அருள் தேவை என்பதே இவை உணர்த்தும் தார்ப்பரியம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஸ்தல விருட்சமாக கடம்ப மரமும், திருவலங்காட்டில் ஆலமரமும் இருப்பது ஸ்தல விருட்சங்களின் உதாரணம். மரங்களை தெய்வத்திற்கு இணையாக வணங்குவதற்கு சொல்லப்படும் மற்றொரு காரணம், இயற்கையை வணங்குதலும் இறைவனை வணங்குதலும் ஒன்றென்பதே. அதுமட்டுமின்றி நாம் வணங்குற தெய்வம் அம்மரத்திலேயே குடி கொண்டிருக்கிறது என்பதும் நம்பிக்கையாகும்.

உதாரணமாக அரச மரத்தில்,

"மூலத்தோ பிரம்ம ரூபயே, மத்தியதோ விஷ்ணு ரூபிணே, அக்ரதா சிவ ரூபயே, விருட்ச ராஜய தே நமஹ "

என சொல்லி வணங்குவார்கள். வேரினில் பிரம்ம தேவனும், மத்தியில் விஷ்ணு பரமாத்மாவும், உச்சியில் சிவனும் இருப்பதாக ஐதீகம். இந்த ஸ்தல விருட்சத்தில் இருந்து கிடைக்கும் கனிகளும், மலர்களும் இறைவனுக்கே அர்பணம் செய்யப்படுகின்றன. மரம் என்பது வெறும் இலையும் கிளையும் அல்ல. அது இயற்கையின் அம்சம், அதன் மொழியை யாரொருவர் புரிந்து கொள்கிறாரோ, அதன் குரலை யாரால் கேட்க முடிகிறதோ அவர்களுக்கு இவ்வாழ்வின் உண்மை பிடிபடும்.

Image : Isha

Next Story
கதிர் தொகுப்பு
Trending News