கொல்கத்தா அணியை வீழ்த்தி ஹாட்-ரிக் வெற்றி பெற்றது ஆர்சிபி.!
By : Pravin Kumar
14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 10 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 10வது லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.இந்த போட்டியில் பெங்களூர் வீரர் டான் கிறிஸ்டியன் அதிரடியாக வெளியேற்றப்பட்டு இவருக்கு பதிலாக ரஜத் பாட்டீதர் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதன்மூலம், மூன்று வெளிநாட்டு வீரர்களுடன் மட்டும் ஆர்சிபி இன்று களமிறங்கியது. கொல்கத்தா அணியில் எந்தொரு மாற்றமும் செய்யவில்லை.
ஆர்சிபி தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் தேவதூத் படிக்கல் களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தியின் இரண்டாவது பந்தை விராட் கோலி மேல் நோக்கி அடித்தார். இதை சரியாக கணித்து ராகுல் திரிபாதி கேட்ச் பிடித்துவிட்டார். இதன்மூலம் விராட் கோலி 6 பந்தில் 5 ரன்கள் குவித்து வெளியேறினார்.இதன்பிறகு களமிறங்கிய ரஜத் பாட்டீதர் அதே ஓவரின் கடைசி பந்தில் போல்டு அவுட்டாகினார். சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டும் கொடுத்து 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதன்பிறகு களமிறங்கிய மேக்ஸ்வெலும், தேவதூத் படிக்கலும் அதிரடியாக விளையாடினார்கள். பவர்பிளேவில் ஆர்சிபி 45 ரன்கள் குவித்து 2 விக்கெட்களை இழந்திருந்தது. பிரசித் கிருஷ்ணா ஓவரில் 25 ரன்களுடன் வெளியேறிய படிக்கலுக்கு பிறகு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் 78 ரன்களும், டீவில்லாயர்ஸ் 76 ரன்களும் அடித்ததன் மூலம் 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட்களை இழந்து 204 ரன்கள் குவித்தனர். இதில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.இதையடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மகிப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதல் சொதப்பலான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தது.
கொல்கத்தா பேட்ஸ்மன்கள் அனைவரும் ஆர்சிபி பவுலர்கள் கையல் ஜேமிசன், சஹால், ஹர்ஷல் பட்டேல் ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து விக்கெட்களை இழந்தனர்.இதில் ரஸ்ஸல் 31, மோர்கன் 29, ஷகிப் அல் ஹாசன் 26, ராகுல் திரிபாதி 25 ரன்கள் குவித்திருக்கின்றனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்களை இழந்து 166 ரன்கள் மட்டுமே குவித்ததால் பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தனது மூன்றாவது வெற்றியை பெங்களூர் அணி பதிவு செய்துள்ளது. இதன்மூலம் தற்போது பெங்களூர் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.