சிஎஸ்கே அணி சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.!
By : Pravin Kumar
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ஜானி பாரிஸ்டோ 7 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான கேப்டன் டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்து கொடுத்தார்.
டேவிட் வார்னரை போலவே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மணிஷ் பாண்டேவும் தன் பங்கிற்கு 61 ரன்கள் எடுத்து கொடுத்தார்.இதன்பின் களத்திற்கு வந்த கேன் வில்லியம்சன் 10 பந்துகளில் 26 ரன்களும், கடைசி ஓவரில் தலைவன் கேதர் ஜாதவ் 4 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 171 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் 75 ரன்களும், டூபிளசிஸ் 56 ரன்களும் எடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மொய்ன் அலி 15 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், இதன் பின்னர் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா (17), ஜடேஜா (7) கூட்டணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.