சீனியர் பிளேயர்களுக்கு வாய்ப்பு இல்லை! இளங்காளைகளோடு இலங்கை பயணிக்கும் இந்திய கிரிக்கெட் அணி - கங்குலி சீக்ரெட் பிளான்!
By : Muruganandham
இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சென்று இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் ஆகஸ்ட் 4 முதல் தொடங்கும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க இருப்பதால், முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய அணி ஜூலை மாதம் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், இலங்கைக்கு ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒருநாள், ஐந்து இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. தனிமைப்படுத்துதல் விதிமுறைகள் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களை எங்கு நடத்தப் போகிறோம் என்பதை இப்போது சொல்லமுடியாது என்றார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக ஜூன் 2 அன்று இந்திய அணி இங்கிலாந்துக்குச் செல்கிறது. இதனால் இலங்கைக்குச் செல்லும் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள்.
விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுபவ வீரர்கள் இல்லாத இளம் இந்திய அணியினர் இலங்கைக்கு சென்று, ஐந்து இருபது ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.