கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இன்டியன்ஸ் அபார வெற்றி.!
By : Pravin Kumar
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனயையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும், ரோஹித் சர்மா 43 ரன்களும் எடுத்து கை கொடுத்தாலும், மற்ற வீரர்கள் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு நிதிஷ் ராணாவும், சுப்மன் கில்லும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.போட்டியின் முதல் ஓவரில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்ந்திருந்த போது சுப்மன் கில் (33) விக்கெட்டை இழந்தார்.
மற்றொரு துவக்க வீரரான நிதிஷ் ராணா 57 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.வெற்றிக்கு தேவையான 70 சதவீத ரன்களை துவக்க வீரர்களே எடுத்து கொடுத்துவிட்ட போதிலும் அடுத்தடுத்த களமிறங்கிய கொல்கத்தா அணியின் அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களை கூட தாண்டாமல் ராகுல் சாஹரின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வந்த வேகத்தில் வெளியேறியதால், கடைசி ஒரு ஓவருக்கு 15 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை கொல்கத்தா அணிக்கு ஏற்பட்டது.களத்தில் தினேஷ் கார்த்திக்கும், ஆண்ட்ரியூ ரசலும் இருந்ததால் எப்படியும் 15 ரன்கள் எடுத்துவிடுவார்கள் என ரசிகர்கள் நம்பிய நிலையில், கடைசி ஓவரை மிகவும் சாமர்த்தியமாக வீசிய டிரண்ட் பவுல்ட் வெறும் 4 ரன்கள் மட்டும் விட்டுகொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.