இஷாந்த் சர்மாவை அணியில் இணைக்க வேண்டும்! முன்னாள் வீரர் கருத்து!
இஷாந்த் சர்மாவை அணியில் இணைக்க வேண்டும்! முன்னாள் வீரர் கருத்து!

By : Pravin kumar
இந்த தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 56 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, வெறும் 36 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து மிகப்பெரும் அசிங்கத்தை சந்தித்தது.
இந்திய பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினாலும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சினாலும் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியும் பெற்றது.
இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள நிலையில், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணி தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அதே போல் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலியும், முகமது ஷமியும் விலகியுள்ளதால், கோலி இல்லாத இந்திய அணியால் ஆஸ்திரேலிய அணியை சமாளிக்க முடியுமா என்ற விவாதமும் ஒரு புறம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், இஷாந்த் சர்மா முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவரை உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “முகமது ஷமிக்கு ஏற்பட்டுள்ள காயம் இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவை கொடுக்கும்.
யார்கர் மற்றும் பவுன்சரால் எதிரணிகளை திணறியடிக்க கூடியவர், அவர் இல்லாதது இந்திய அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான். இஷாந்த் சர்மா முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவரை உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.
ஒரு நாளுக்கு அவரால் 20 ஓவர் வீச முடிந்தாலும் அதை வைத்து அணி நிர்வாகம் சமாளித்து கொள்ளும். முழு உடற்தகுதியுடன் இருந்தால் அவரை நாளையே ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
